தமிழ் சினிமா பின்தங்கியிருக்கிறது. – அருண்பாண்டியன் குற்றச்சாட்டு!

நடிகர் கருணாஸ் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர் தேவா. பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் பேசுகையில்,”

18 வருடங்களுக்கு பிறகு தான் ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நான் மீண்டும் நடிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு என்னைத்தேடி எட்டு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. அதில் எனக்கு இரண்டே இரண்டு படத்தின் கதைதான் பிடித்தது. அதில் ஒன்று ஆதார். அதன்பிறகு இயக்குநரிடம் இந்த படத்தில் வேறு யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். கருணாஸ் என்றார். கருணாசுக்கு போன் செய்து ராம்நாத் கதையை சொன்னார். நன்றாக இருந்தது. அவர் சொன்னதை சொன்னவிதத்தில் எடுத்து விடுவாரா? என கேட்டேன். அவர்தான் முழு நம்பிக்கையுடன் எடுத்துவிடுவார் என்றார். கதையைச் சொன்ன மாதிரி எடுத்து விட்டால், நான் என் சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை சலுகையாக தருகிறேன் என்றேன். படம் மிக நேர்த்தியாக உருவாகியிருக்கிறது.‌

இங்கு மேடையில் இயக்குநர் சரவணன் பேசும்போது,‘ தமிழ் சினிமாவின் பொற்காலம் இது’ என தவறான தகவலை சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது, இயக்குநர் பாரதிராஜா படம் இயக்கிய காலம்…நாங்கள் நடித்த காலம்.. என அதனைத்தான் குறிப்பிடவேண்டும். தற்போது எல்லாம் மாறிவிட்டது. தமிழ் சினிமா எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என குறிப்பிட வேண்டுமென்றால், இன்று தமிழகத்தில் வேற்று மொழி படங்கள் தான் அதிக வசூலை குவிக்கிறது. சமீபத்தில் வெளியான அஜித் படம் மற்றும் விஜய் படம் ஆகிய இரண்டும் படத்திற்காக செலவழிக்கவில்லை. தங்களுக்காக செலவழித்து கொண்டனர். தயாரிப்பு செலவின் 90 சதவீதத்தை ஊதியமாக கேட்டால் எப்படி? படத்தை உருவாக்க இயலும். இந்த மேடையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, ‘இந்தப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்’. நாங்கள் படம் எடுக்கும் பொழுது 10% தான் சம்பளம், மீதி 90% படத் தயாரிப்பிற்காக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமா கதைகள் பட உருவாக்கத்தால் வென்றது

ஆதார் ’படத்தில் கருணாஸ் சம்பளம் வாங்கவில்லை. படத்தின் தயாரிப்பாளரை நாங்கள் யாரும் சந்திக்கவே இல்லை. இங்குதான் சந்திக்கிறோம். தமிழ் சினிமா ஒரு மோசமான திரை உலகம். இருப்பினும் இந்த சினிமா மீது நம்பிக்கை வைத்து, புதிய தயாரிப்பாளர் ஒருவர் வந்திருக்கிறார் என்றால், அவரை மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்திற்கு நாங்கள் உண்மையாக உழைத்திருக்கிறோம். அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.