கோவிந்த் வசந்தா இசையில், டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் காளிதாஸ் ஜெயராம் படம்!

Many Many Happy Returns Release Date Announced

‘ஜூன்’, ‘மதுரம்’ மற்றும் ‘கேரளா கிரைம் ஃபைல்ஸ்’ வெப் தொடர்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns). தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இப்படத்தை முன்னணி நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் உறவுகளின் அழகையும், பிடித்தமான மனிதர்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நகைச்சுவை மற்றும் இசையுடன் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படைப்பாக இது உருவாகியுள்ளது. கடந்து வந்துவிட்டதாக நினைக்கும் சில உறவுகளும், முடிவடையாத சில அத்தியாயங்களும் நம் நினைவுகளில் தொடர்ந்து பயணிப்பதை இப்படம் அழகாகப் பேசுகிறது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் லட்சுமி ஜோதிஷ், லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா மற்றும் ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஹம்மது கபீர் மற்றும் ஹசன் ரஷீத் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஹம்மது கபீர் கதை எழுத, அவருடன் ஜாபின் ஜான் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவும், மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர். மேலும், விஷ்ணு கோவிந்த் ஒலிப்பதிவு, மஷார் ஹம்சா ஆடை வடிவமைப்பு, ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனை மற்றும் அனு விஸ்வநாதன் நடன இயக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ வரும் டிசம்பர் 4-ம் தேதி இரு மொழிகளிலும் திரைக்கு வருகிறது.