‘நடுவன்’ படத்தின் இயக்குநரும், ‘இனிது இனிது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவருமான சரண் என்கிற ஷாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் ‘லேபிள்’, ‘கட்டாளன்’, ‘டோரதி’, ‘சிறை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஹரிசங்கர் நாயகனாகவும், சுஜா சுகுமார் நாயகியாகவும் நடித்துள்ளனர். யுதிஷ்டரன் (Yuthishtran E) இசையமைத்துள்ள இப்பாடலை ஹனன் ஷா (Hanan Shaah) மற்றும் நிஹால் சாதிக் (Nihal Sadiq) ஆகியோர் பாடியுள்ளனர்.
சரண் மற்றும் ஹரிசங்கர் இருவரும் தங்களது பயணத்தின்போது சந்தித்த காதலர்களின் நினைவுகளையும், அந்தப் பயணத்தில் தாங்கள் கண்ட காதல் உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். பேசவும், கேட்கவும் முடியாத ஓர் இளைஞன், தனது காதலியின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அவள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் அவளுடன் பயணம் மேற்கொள்கிறான். அந்த அழகான காதல் பயணத்தையும், இருவருக்கும் இடையிலான அன்பு மற்றும் மென்மையான உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூரு, கோவா, ஜெய்ப்பூர், சண்டிகர், சிம்லா, சாங்லா, சிட்குல் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பம், ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கான பிரம்மாண்டமான காட்சியமைப்புகளைக் கொண்டுள்ளது. இதுவரை பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஹரிசங்கர், இதில் முற்றிலும் மாறுபட்ட காதல் நாயகனாகத் தனது நடிப்புத் திறமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இணையாக நாயகி சுஜா சுகுமாரும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு சாதாரண மியூசிக் வீடியோவாக இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வைத் தரும் வகையில் உருவாகியுள்ள ‘நீயும் நானும்’ பாடலின் இறுதியில் இடம்பெறும் எதிர்பாராத திருப்பமும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.