‘ஆல் பாஸ்’: பணப் பெட்டியால் சிதறிய கூட்டுக்குடும்பம்… (விமர்சனம்).

All Pass Tamil Movie Review

அறிமுக இயக்குநர் மைதீன் எழுத்து, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில், கூட்டுக்குடும்பத்தின் மேன்மையையும் பணத்தால் மாறும் மனித குணங்களையும் மையமாகக் கொண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’ (All Pass). இத்திரைப்படத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஜனனி, ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்னா பாலச்சந்திரன், சரத் லோகித்ஷவா, மோகனா, சஞ்சய், கோகுல், நிகில், ரோஷன் பஷீர், அருவி மதன், இயக்குநர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, தில்ராஜு. இசை, ஜேம்ஸ் வசந்தன்.

வடசென்னைப் பகுதியில் வசிக்கும் மூன்று வெவ்வேறு குடும்பங்களின் உணர்வுப்பூர்வமான பிணைப்பை மையமாகக் கொண்டு தொடங்குகிறது. வடசென்னைப் பகுதியில் வசிக்கும் மூன்று பெண்களுக்கு ஒரே மருத்துவமனையில் ஒரே பிரசவ காலகட்டத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. அந்தச் சமயத்தில் அந்த மருத்துவமனையில் நடக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகள், அந்த மூன்று வெவ்வேறு குடும்பங்களுக்குள்ளும் ஒரு பிரிக்க முடியாத நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில், அனைவருமே அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தாலும், தங்களுக்குள் எந்தவொரு பாகுபாடும் இன்றி ஒரே கூட்டுக்குடும்பமாகவே மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்து, தற்போது கல்லூரிப்  படிப்பை எட்டும் வாலிப பருவத் தருவாயில் இருக்கின்றனர். இந்த ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தலைவராக இருந்து ஜெயப்பிரகாஷ் அனைவரையும் வழிநடத்துகிறார். அவருடன் சுப்பிரமணிய சிவா மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகிய இருவரும் அவரது சொந்தத் தம்பிகளைப் போலவே இருந்து குடும்பத்தைக் காத்து வருகின்றனர்.

இந்த சுமுகமான சூழலில், கதையின் திருப்புமுனையாக அவர்கள் வசிக்கும் பகுதியின் எம்.எல்.ஏ- சரத் லோகித்ஷவா, சட்டவிரோதமாகச் சேர்த்த கோடி கோடியான பணத்தை ஒரு ரகசியக் கிடங்கில் வைத்துள்ளார். ஒரு நாள், அந்தப் பகுதிக்கு அருகில் ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா மற்றும் பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோரது மகன்கள் தற்செயலாக விளையாடச் செல்கிறார்கள். அப்போது அந்த கிடங்கிற்குள், எதேச்சையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பணப்பெட்டியைப் பார்க்க நேரிடுகிறது. அந்தப் பணப்பெட்டியை யாருக்கும் தெரியாமல் தங்களது வீட்டிற்கு எடுத்து வந்து விடுகின்றனர். அதுவரை வறுமையிலும் ஒற்றுமையிலும் வாழ்ந்த அந்த மூவர் குடும்பமும், கையில் அளவுக்கு அதிகமாகப் பணம் வந்த பிறகு தங்களுக்குள் சண்டையிட்டுத் தனித்தனியாகப் பிரிந்து சிதறுகிறது. மற்றொரு புறம், காணாமல் போன தனது கோடிக்கணக்கான பணத்தைத் தேடிக்கொண்டு கொடூரமான தாதா எம்.எல்.ஏ சரத் லோகித்ஷவா அவர்கள் வசிக்கும் பகுதிக்கு வருகிறார். பணத்தால் பிரிந்த அந்தக் குடும்பங்கள் இந்த ஆபத்திலிருந்து எப்படித் தப்பினார்கள், தங்களது தவறை உணர்ந்து மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதே ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் மீதித் திரைக்கதையாகும்.

இத்திரைப்படம் சமுதாயத்திற்குத் தேவையான ஒரு மிகச் சிறந்த பாசிட்டிவ் கருத்தை வலியுறுத்தி, அதே சமயம் சுவாரசியமான கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் ஆங்காங்கே ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் நிறைந்திருப்பதும், சில காட்சிகள் அமெச்சூர்த்தனமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதும் படத்திற்குச் பலவீனமாகத் தோன்றுகிறது. இருப்பினும், ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாகத் தொடங்கும் இந்தத் திரைப்படம், கதையின் போக்கில் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லராக  மாறி, யாரும் எதிர்பார்க்காத அதிரடித் திருப்பங்களுடன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களைச் ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறது.

கதையின் முக்கியத் தூண்களாகத் தாங்கி நிற்கும் மூத்த நடிகர்களான ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா மற்றும் பிரசன்ன பாலச்சந்திரன் ஆகிய மூவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்துப் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடித்துள்ள செந்திகுமாரி, வினோதினி மற்றும் மோகனா ஆகியோரும் தங்களது எதார்த்தமான நடிப்பின் மூலம் குறிப்பிடத்தகுந்த அளவில் காட்சிகளை மெருகேற்றியுள்ளனர்.

படத்தில் காதலர்களாக வலம் வரும் இளம் ஜோடிகளான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் ஜனனி தங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுடன் சிறுவர்களாக வரும் சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோரின் நடிப்பும், கொடூரமான வில்லன் எம்.எல்.ஏ பாத்திரத்தில் மிரட்டியிருக்கும் சரத் லோகித்ஷவா, கவுன்சிலராக வரும் சத்யா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டராக அதிரடி காட்டியிருக்கும் அருவி மதன் உள்ளிட்ட ஒட்டுமொத்த நட்சத் திரங்களும் தங்களது கதாபாத்திரங்களுக்குத் தகுந்த படி நடித்துள்ளனர்.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் மைதீன், ஒரு சாதாரணப் பொழுது போக்குப் படமாக மட்டும் இதனைச் சுருக்கிவிடாமல், பேராசையினால் மனித பந்தங்கள் எப்படிப் பிரிகின்றன என்ற ஒரு சிறந்த சமூக விழிப்புணர்வுக் கருத்தை வணிக ரீதியான திரைக்கதையில் சுவாரசியமாக இணைத்ததற்காக அவரை பாராட்டலாம். ஒரு சில மேக்கிங் குறைபாடுகள் இருந்தாலும், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய படமாகும்.