அந்தகன் – விமர்சனம்!

விஜய் சேதுபதி நடிப்பினில் வெளியான ‘மெரி கிருஸ்மஸ்’ படத்தினை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம், ‘அந்தாதுன்’ (பார்வையற்றவனின் டியூன்). இந்தப்படத்தினை, தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார், இயக்குநரும் நடிகருமான தியாகராஜன். ஹிந்தியில் வெற்றி பெற்றதை போல், தமிழில் வெற்றி பெறுமா, பார்க்கலாம்.

பிரஷாந்த் ஒரு பியானோ இசைக்கலைஞர். பார்வையை இழந்த அவரது ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே லண்டனுக்கு செல்ல வேண்டும் என்பது தான். அதற்காக தேவைப்படும் பணத்தினை, பியானோ டியூஷன் எடுப்பதிலும், பகுதி நேரத்தில் ஒரு பாரில் பியானோ வாசித்து அதில் கிடைப்பதையும் கொண்டு சேர்த்து வருகிறார்.

பிரஷாந்த் பியானோ வாசித்து வரும் பாருக்கு ரெகுலராக வருகிறார், நடிகர் கார்த்திக். இதன் மூலம் இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. ஒரு நாள் கார்த்திக்கின் வீட்டிற்கு வருகிறார், பிரஷாந்த். அங்கு ஒரு கொலை நடக்கிறது. கொலையாளிகள் அவரை தீர்த்துகட்ட முடிவு செய்கின்றனர். அதிலிருந்து தப்பிக்கும் பிரஷாந்த், ஒரு கிட்னி திருடும் கும்பலில் சிக்குகிறார். அந்த கும்பல் அவரது கிட்னியை எடுத்து விட்டு, கொலை செய்ய முயற்சிக்கிறது. இந்த இரண்டு கும்பல்களிடமிருந்து அவர்  எப்படி தப்பித்தார் என்பதே, படத்தின் விறுப்பான திரைக்கதை மற்றும் யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ்!

பிராஷாந்த் அதே குறும்புச் சிரிப்பு, இளமை தோற்றத்துடன் காட்சி தருகிறார். பார்வையற்றவராக சிறப்பாக நடித்திருக்கிறார். கொலை குறித்தான கம்ப்ளைன்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பிறகு அங்கிருந்து தப்பித்தால் போதும் என திணறும் காட்சியிலும், பார்வையற்ற நிலையில் கிட்னி திருடும் கும்பலிடமிருந்து தப்பிக்கும் காட்சியிலும், பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். ப்ரியா ஆனந்துடனான நெருக்கமான காட்சிகளில் கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறார்.

பிரஷாந்துக்கு அடுத்தபடியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சிம்ரன். எல்லா இடங்களிலுமே ஸ்கோர் செய்திருக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் சர்ப்ரைஸ்!

பிரியா ஆனந்த், அழகாக இருக்கிறார். நடிப்பதற்கு பெரிதாக வாய்பில்லை! கிடைத்த காட்சிகளில் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.

சமுத்திரக்கனி, இன்னுமொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஓகே! அந்தாதுன்’ னில் நடித்த ‘மானவ் விஜ்’ நடித்த அளவிற்கு இல்லை! அவரது மனைவியாக நடித்திருக்கிறார், வனிதா விஜயகுமார்.

மற்றபடி நவரச நாயகன் கார்த்திக், நடிகராகவே நடித்திருக்கிறார். மற்றைய கதாபாத்திரங்களில் ஊர்வசி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பூவையார், ஆகியோர் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை, பாடல்கள் சிறப்பு!

பியானோ இசை மூலம் லிடியன் மற்றும் பிரஷாந்த் ஆகியோர் சிறப்பு கவனம் பெறுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் ஒளிப்பதிவு சிறப்பு!

டிவிஸ்டுகள் நிறைந்த சஸ்பென்ஸ், க்ரைம் த்ரில்லரான ‘அந்தாதுன்’ படத்தினை சிற்சில மாற்றங்களுடன், ரசிக்கத்தக்க வகையில் ‘அந்தகன்’ னை சிறப்பாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார், இயக்குநர் தியாகராஜன்.

அந்தகன் – சஸ்பென்ஸ், க்ரைம் த்ரில்லர் படங்களை, விரும்பிப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!