சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பெற்ற குழந்தையை பிரிந்த அம்மாவிற்கும், அந்த குழந்தையை வளர்த்த அம்மாவிற்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமே, ஆர் யூ ஓகே பேபி. இந்த மாதிரியான படங்கள், இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு காலத்திலிருந்தே சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவை தான். அதை, இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தனது சொந்த அனுபவத்தினை தொகுத்து, அதாவது தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சொல்வதெல்லாம் உண்மை சம்பவத்தினை திரைக்கதையாக்கி, உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் வைத்துள்ளார்.
மங்கி கிரியேடிவ் லேப் தயாரித்துள்ள ஆர் யூ ஓகே பேபி படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்க, கிருஷ்ணசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அசோக் – முல்லையரசி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். பலமுறை கருக்கலைப்பு செய்த நிலையில், மறுபடியும் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாமல், முல்லையரசி வெளியுலகிற்கு தெரியாமல் ஒரு குழந்தைக்கு தாயாகிறார். வறுமை காரணமாகவும், சமூகத்திற்கு பயந்தும் அந்த குழந்தையை, சமுத்திரக்கனி – அபிராமி தம்பதிக்கு நர்ஸ் வினோதினி மூலமாக விற்று விடுகிறார்.
சில மாதங்கள் கழித்து, அசோக் முல்லையரசியை கைவிட்ட நிலையில், முல்லையரசி, குழந்தையை திரும்பப்பெற முயற்சிக்கிறார். போலீஸ், குழந்தை கடத்தியதாக சமுத்திரகனி – அபிராமி தம்பதி மீது வழக்கு பதிவு செய்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே, ஆர் யூ ஓகே பேபி’யின், எமோஷனலான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தன்னுடைய தொலைக்காட்சி அனுபவங்களை தொகுத்து, அவர் சந்தித்த சில கசப்பான அனுபவங்களுக்கு பழி தீர்த்துள்ளார்!? மேலும் இது மாதிரியான ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு என்பது கிடைக்காது என்பதையும், அதோடு நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கே அது சாதகமாக இருக்கும் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார்.
போதிய விழிப்புணர்வு இல்லாமல், லிவிங் டு கெதரில், வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்கள், குழந்தையை தத்து எடுக்கும் போது மேற்கொள்ளப் படவேண்டிய வழிமுறைகளை சரியாக பின்பற்றாத தம்பதிகள் குறித்த பிரச்சினைகளை, முடிந்தவரை படமாக்கியிருக்கிறார்கள்.
குழந்தைக்காக ஏங்கும் தாயாக அபிராமி, சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர், நடித்த ஒவ்வொரு காட்சிகளுமே சிறப்பாக, காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக ‘பிரெஸ்ட் பம்ப்’ பயன்படுத்தி, குழந்தை பெறாமலேயே பால் சுரக்கச்செய்யும் காட்சியும், அதை நீதிபதியிடம் சொல்லி அழுதபடியே, குழந்தையை பெறத்துடிக்கும் காட்சியிலும், அபிராமி சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, தாய்மார்கள் கண்களில் நீர் வரவழைத்து விடுகிறார்.
காதலனான, அசோக்கின் வாலிப திமிரில், வலுக்கட்டாயமாக குழந்தையை பெற்றுவிட்டு, வளர்க்க முடியாமல் தத்து கொடுத்துவிட்டு, அந்தகுழந்தையை மீண்டும் பெறத்துடிக்கும் அம்மாவாக முல்லையரசி, நன்றாக உணர்ந்து நடித்துள்ளார். சில காட்சிகளில் அவரின் அதீத நடிப்பு, அவரை ரசிக்க விடாமல் செய்து விடுகிறது.
முல்லையரசியிலன் காதலன், ஏமாற்று பேர்வழி கதாபாத்திரத்தில் அசோக். நம்பர் ஒன் அக்யூஸ்ட்டை கண்முன் நிறுத்துகிறார்.
அபிராமியின் கணவராக சமுத்திரகனி, சைல்ட் வெல்ஃபேர் கமிட்டி தலைவராக மிஷ்கின் ஓகே!
நரேன், பாவல் நவகீதன், வினோதினி வைத்தியநாதன், அனுபமா குமார் ஆகியோர், குறிப்பிடும்படும் படி நடித்திருக்கிறார்கள்.
மிகச்சரியான க்ளைமாக்ஸுடன் படம் முடிவது சிறப்பு!
‘ஆர் யூ ஓகே பேபி?’ – யெஸ் மாம்!