‘பிளாஸ்ட்’ –  விமர்சனம்!

‘ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்து, அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் எழுத்து, இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், பிளாஸ்ட். இதில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி  முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- அருண் ராதாகிருஷ்ணன். இசை- ரவி பஸ்ரூர்.

சிறுவர், சிறுமியருக்கான கராத்தே பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார், அர்ஜூன். அவரது மனைவி அபிராமி, மகள் ப்ரீத்தி முகுந்தன், அதம்பி விவேக் பிரசன்னா என அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.

அர்ஜூன், தன்னுடைய மகள் ப்ரீத்தி முகுந்தனின் சிறு வயதிலிருந்தே அவருக்கு கராத்தே சொல்லிக்கொடுத்து வருகிறார். மேலும், முகம் தெரிந்தவர் தெரியாதவர் என யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்தும் அறிவுறுத்தி வருகிறார். எந்த சூழ்நிலையையும் கையாளும் திறமைசாலிப் பெண்ணாக வலம் வருகிறார்.

ஒரு நாள், ரௌடி வினோத் சாகர், ப்ரீத்தி முகுந்தனின் செயினை பறிக்க முயற்சிக்க, அவரை அடித்து உதைத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறார். சாதரண விஷயமாக இருந்த இந்த செயின் பறிப்புப் பின்னணியில் 1000 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட மாஃபிய கும்பலின் தலைவன் ஜான் கொக்கேன் இருப்பது தெரிய வருகிறது. ஜான் கொக்கேனின் அடியாள் அர்ஜுன் சிதம்பரம், பிரீத்தி முகுந்தனைத்தேடி வருகிறார். அர்ஜுனின் மொத்தக் குடும்பமும் ஒரு மாஃபியா கும்பல் தலைவன் ஜான் கொக்கேனிடம் மாட்டிக்கொள்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘பிளாஸ்ட்’.

சில, பல லாஜிக் விதிமீறல்களுடன் படமாக்கப்பட்டிருந்தாலும், படம் விறுவிறுப்பாகத்தான் செல்கிறது. பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி எவ்வளவு அவசியமானது. என்பதை ஐடி அலுவலக பின்னணியில் சொல்லியிருப்பது பகீர் உண்மை.  நள்ளிரவில் காருக்குள் நடக்கும் சண்டைகாட்சிக்கு பெண்கள் பலத்த கைத்தட்டல்களுடன் ஆர்ப்பரிக்கின்றனர். அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் இருவருமே சண்டைக்காட்சிகளின் போது பெண்களின் கவனத்தை எளிதாக ஈர்த்து விடுகின்றனர். அர்ஜூன் இந்த வயதிலும் கட்டுக்கோப்பான தனது உடல் வலிமையை வெளிப்படுத்தி, இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறார். வன்முறை காட்சிகளைகொஞ்சம் தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் பார்ப்பதற்கு இன்னும் ஏதுவாக இருக்கும்.

எழுதி, இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ், பெண்களுக்கான தன்னம்பிக்கையையும், தைரியத்தினையும் கொடுத்திருக்கிறார். சில குறைகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால், அறிமுக இயக்குநர் போல் இல்லாமல் நேர்த்தியாகவே திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

நடிப்பினை பொறுத்தவரை, அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி  முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் என அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களில் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்பிற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

சண்டைப் பயிற்சியாளர் பீனிக்ஸ் பிரபு ஆக்‌ஷன் காட்சிகளை ரசிக்கும்படி அமைத்திருக்கிறார்.

குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோரையும் சண்டைக்காட்சிகளில் நடிக்க த்திருப்பது ரசனைக்குரியது. இந்த காட்சிகளில் பெண்கள் கைத்தட்டுகின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற, இன்றைய சூழலில் வெளியாகியிருக்கும் ‘பிளாஸ்ட்’ திரைப்படம், பெண்களிடம் நல்ல வரவேற்பினை பெறும் என்பதில் சந்தேகமில்லை!