‘காட்டாளன்’ திரைப்படத்தில் நாயகனாக ஆண்டனி வர்கீஸ், முக்கிய கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் நடித்திருக்க, இவர்களுடன், சுனில், கபீர் துஹான் சிங், ‘புஷ்பா’ புகழ் ராஜ் திரண்டாஜ் , பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக் , வ்ளாகர் – பாடகர் ஹனன்ஷா, ராப்பர் பேபி ஜீன், ஹிப்ஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ்’ நிறுவனத்தின் சார்பில், ஷெரீப் முகமது தயாரித்துள்ளார். திரைக்கதையை ஜோபி வர்கீஸ் – பால் ஜார்ஜ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை உன்னி .ஆர் எழுதியுள்ளார் . புதுமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
’கே.ஜி.எப்’, ‘புஷ்பா’ போன்ற படங்களின் சாயலில், ரத்தம் தெறிக்கத் தெறிக்க யானைத் தந்தங்கள் கடத்தல் பற்றிய மாஃபியாக்களின் அட்டூழியமே காட்டாளன்.
மாஃபியா கும்பல்களின் தலைவர்களான கபீர் துகான் சிங், சுனில் இருவரும் யானைத் தந்தங்களை போட்டி போட்டு கடத்தி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் யானைத்தந்தங்களுக்கு மதிப்பு அதிகம். இலங்கையில் இருக்கும் ஒரு கும்பலுக்கு தந்தங்களை அனுப்புவதில், கபீர் துகான் சிங், சுனில் இருவருக்கும் மோதல் உருவாகிறது. சுனில், இலங்கைக்கு கடத்தும் தந்தங்களை அமைச்சரின் துணையுடன் தடுத்து நிறுத்தி அபகரிக்கிறார், கபீர் துகான் சிங். அதிலிருந்து பத்திரமாக இலங்கைக்கு தந்தங்களை அனுப்பும் பொறுப்பு ஆண்டனி வர்க்கீஸூக்கு வருகிறது. அவரும் பத்திரமாக சேர்த்து விடுகிறார். இதன் பிறகு, பிரிந்திருந்த கபீர் துகான் சிங், சுனில் இருவரும் சேர்ந்து ஆண்டனி வர்க்கீஸை கொல்ல முயற்சிக்கின்றனர். ஏன், எதற்கு? என்பது தான், காட்டாளன்.
கதை ஓகேவாக இருந்தாலும், திரைக்கதையில் பெரிதாக சுவாரசியம் இல்லை. குழுக்களுக்கிடையே நடக்கும் சண்டை, எந்த பரபரப்பையும், விறுவிறுப்பினையும் அளிக்கவில்லை. பல படங்களில் பார்த்த காட்சிகள் மற்றும் நம்பமுடியாத காட்சிகள் ஒரு விதமான அயற்சியைத் தருகிறது. அதிலும் இலங்கையில் நடக்கும் காட்சிகள் படு மோசம். சர்வதேச கடத்தலை மிக சாதரணமாக செய்கின்றனர்.
நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ், தோற்றத்திலும் நடிப்பிலும் ரசிகர்களை கவருகிறார். சுனில், கபீர் துகான் சிங் காட்சிகளுக்கேற்றபடி நடித்துள்ளனர். க்ளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் காட்சியளிக்கிறார், துஷாரா விஜயன். சண்டைக்காட்சிகளில் தனிக்கவனம் பெறுகிறார். மற்றபடி பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவும், இசையும் காட்சிகளுக்கு வலுசேர்த்துள்ளது. மற்றபடி குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை.
‘காட்டாளன்’ – நேர்த்தியற்ற படைப்பு!