சித்தார்த், ‘எடாகி எண்டர்டெயின்மெண்ட்’ (ETAKI ENTERTAINMENT) நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம், சித்தா. இது ஒரு எமோஷனல் டிராமா திரில்லர். சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஶ்ரீ, S.ஆபியா தஸ்னீம், பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், S. U. அருண் குமார். இப்படத்தை ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ வெளியிடுகிறது.
சித்தா திரைப்படத்தினில், சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட சிலரைத் தவிர, படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள். குழந்தைகள் பேசிப்பழகும் வயதினில் சித்தப்பாவை திக்கித் திணறி, ச்சித்தா.. என்றும், சித்து என்றும் அழைப்பது வழக்கம். இதுவே, ‘சித்தா’.
பழனி நகராட்சியில் சூப்பர்வைசராக இருப்பவர், சித்தார்த். இவர் அண்ணனின் மரணத்தை அடுத்து, சித்தார்த் குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். அண்ணனின் மகள் சஹஷ்ரா ஶ்ரீ மீது அளவு கடந்த பாசத்துடன் இருந்து வருகிறார். பழனியை அடுத்த காட்டுப்பகுதியில் சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்படுகிறார்கள். போலீஸ் குற்றவாளியை நெருங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், சித்தார்த்தின் அண்ணன் மகள் சஹஷ்ரா ஶ்ரீ, கடத்தப்படுகிறார். சிறுமியை தேடி போலீஸூம், சித்தார்த்தும் செல்கின்றனர். கொலையாளி பிடிபட்டானா, இல்லையா? என்பதே சித்தா படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
சித்தா, படம் ஆரம்பித்த சில காட்சிகளிலேயே, சித்தார்த்திற்கும் அவரது அண்ணன் மகளுக்கும் உள்ள பாசப்பிணைப்பினை, அழகாக காட்டி விடுகிறார்கள். முதலில் கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை, அதன் பிறகு வேகம் எடுக்கிறது. ஆங்காங்கே ஒரு சில அமெச்சூர்த் தனமான காட்சிகளும் உண்டு. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், குற்றவாளி மொட்டையடித்து, மாறு வேடத்தில் ஆட்டோவில் செல்லும் காட்சியை சொல்லலாம். மற்றபடி படத்தில் பெரிதாக குறைகள் இல்லை.
வித்தியாசமான கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து வரும் சித்தார்த்திற்கு இந்தப்படம், முக்கியமான படம். ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ஒரு காட்சியில், அதாவது சித்தார்த்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிறகு, சித்தார்த்தின் அண்ணி அஞ்சலி நாயர், தன்னுடைய மகள் சஹஷ்ரா ஶ்ரீயிடம், பிற ஆண்கள், கைகளைத் தவிர உடலின் வேறு பாகங்களை தொட அனுமதிக்கக் கூடாது. என அறிவுரை சொல்லும் காட்சியில் அந்த சிறுமி, ‘சித்தா’ தொட்டா..’ என கேட்கும். அப்போது, ‘சித்தா தொடமாட்டாங்க. அப்படி தொட்டாலும் அம்மாகிட்ட சொல்லனும்.’ என சொல்வார். இதை கவனித்தபடி நிற்கும் சித்தார்த் கொடுக்கும் முகபாவனை அல்டிமேட்! அந்தக்காட்சியில் கமல்ஹாசனை பார்ப்பது போல் உணர்வு ஏற்படுகிறது. இப்படி சில காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார், சித்தார்த்.
சஹஷ்ரா ஶ்ரீ, S.ஆபியா தஸ்னீம் இரண்டு சிறுமிகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் சித்தார்த்தின் அண்ணன் மகளாக நடித்திருக்கும் சஹஷ்ரா ஶ்ரீ, மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். விருதுகளை கொடுப்பவர்களும், விற்பவர்களும் இந்த சிறுமியை அனுகுவர்.
சித்தா படத்தில் நடித்த நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், பாலாஜி உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் தனி கவனம் பெறுகின்றனர். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பெண், டி எஸ் பியிடம் நடந்து கொள்ளும் விதமெல்லாம் சூப்பர்!
இயக்குநர் S.U.அருண் குமார், கோரமான காட்சிகளை காட்டாமல் வசனமாக பதிவு செய்திருப்பதில், அவரது கவனம் தெரிகிறது.
விஷால் சந்திரசேகர் பின்னணி இசையும், பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும் சிறப்பு.
‘சித்தா’ பொழுதுபோக்கு அம்சங்களின்றி, தேவைப்படும் ஒரு விழிப்புணர்வு படமாக இருக்கிறது.