‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!

‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ சார்பில், எஸ்.லக்‌ஷ்மண் குமார் தயாரித்து, மனு ஆனந்த் எழுத்து இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது, ‘மிஸ்டர் எக்ஸ்’. இதில் ஆர்யா, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், ரைசா வில்சன், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திபு நிணன் தாமஸ், இசை. ஒளிப்பதிவு,  அருள் வின்செண்ட்.

இமயமலைப் பகுதியில் சோதனைக்காக, அணுக்கருவின் மூலம் வெடிக்கச்செய்யும் ஒரு நியுக்கிளியர் டிவைஸை, எடுத்துச்செல்கிறது. அப்போது ஏற்படும் கடும பனிச்சரிவின் போது அந்த டிவைஸ் தொலைந்து போகிறது. அதை கண்டுபிடிக்க ‘ரா’ ஏஜெண்ட் சரத்குமார் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் அந்த டிவைஸ் ரஷ்யாவின் கைகளில் செல்கிறது. சரத்குமாரும் ரஷ்யாவிடம் சிக்கிக்கொள்கிறார். டிவைஸையும், சரத்குமாரையும் பாகிஸ்தான் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இந்த விஷயம் இந்தியாவிற்கு தெரிய வருகிறது. சரத்குமார் பாகிஸ்தானின் விசாரணையில், இந்திய ராணுவ விஷயங்களை எந்த சூழைலையிலும் சொல்லி விடக்கூடாது. என்பதற்காக, ரா பிரிவின் அதிகாரி ஜெயப்பிராகாஷ் சரத்குமாரை கொல்வதற்கு ஒரு டீமை நியமிக்கிறார். அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் இன்னொரு  ரா அதிகாரி மஞ்சு வாரியர், சரத்குமாரை உயிருடன் மீட்கவும் அந்த டிவைஸை கைப்பற்றவும், ரா ஏஜெண்ட் ஆர்யாவை நியமிக்கிறார். ஆர்யா என்ன செய்தார்? என்பது தான், மிஸ்டர் எக்ஸ்!

‘ரா’ ஏஜெண்டாகளாக சரத்குமார், ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மூவருமே படத்திற்கு சிறப்பான பங்களிப்பினை கொடுத்திருக்கிறார்கள். ஆ பிரிவுகளின் ஒரு மூத்த அதிகாரியாக மஞ்சு வாரியரும், ஜெயப்பிரகாஷூம் நடித்திருக்கிறார்கள். அனைவருமே குறிப்பிடத்தக்க வகையில் நடித்துள்ளனர். கதையின் போக்கையும், திருப்பு முனைகளையும் ஏற்படுத்துகின்ற கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். அவருடைய தோற்றம் பெரிதாக ஈர்க்கவில்லை. சண்டைக்காட்சிகளில் குறிப்பிடும்படி நடித்துள்ளார். ஆர்யா, திடகாத்திரமான உடல்வாகுடன் சண்டைக்காட்சிகளில் தனிக்கவனம் பெறுகிறார். அனகாவுடனான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கௌதம் ராம் கார்த்திக், ஸ்டைலிஷாக வலம் வருகிறார். இவரது பாத்திரப்படைப்பும், தோற்றமும் ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறது. காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் இருவரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

அனகா, மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங் ஆகியோரில் ரசிகர்களிடம் அதிக ஈர்ப்பினை ஏற்படுத்தியவர், அனகா தான்.  ஆர்யாவுக்கும், அனகாவுக்குமான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. இந்த காட்சிகள் இன்னும் இருந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. அனகா, அழகாகான தோற்றத்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் , காட்சிகளை பிரமிக்கத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பின்னணி இசை, காட்சிகளை மேம்படுத்திக்காட்டியிருக்கிறது. ஒரு சில காட்சிகளில் பின்னணி இசை, பிரம்மாதம். படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, முடிந்தவரை காட்சிகளை பரபரப்பாக காட்டியிருக்கிறார். ஸ்டண்ட் சில்வா, சண்டைகாட்சிகளை இன்னும் தரமானதாக உருவாக்கியிருக்கலாம்.

சிறுவனின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம், அணு உலையைத் தகர்க்கத் தூண்டுகிற, சாதரண பழி வாங்கும் கதை தான், இந்தப்படம். அதை, இந்திய உளவுத்துறையின் பின்னணியில் கொடுத்திருக்கிறார். இயக்குநர் மனு ஆனந்த். சோகம் என்ன என்றால், அதை சிறுவர்களின் கண்ணோட்டத்திலேயே படமாக்கியிருப்பது தான்.  காட்சியமைப்புகள், 17 வயதுகுட்ப்பட்ட சிறுவர்கள் படமாக்கியது போல் இருக்கிறது. ‘RAW’ பற்றிய அடிப்படை புரிதல்களும், அணு பற்றிய புரிதல்களும் அறவே இல்லை. கதையின், யூகிக்க முடியாத டிவிஸ்டுகள் திரைக்கதையின் மிகப்பெரும் பலம். அது மட்டுமே ரசிக்கவைக்கின்றன.

மற்றவை – ‘மிஸ்டர் எக்ஸ்’ 2 ஆம் பாகத்தில்!