‘’கான் சிட்டி” 25-வது நாள் வெற்றி விழா: ரசிகர்களுக்கு படக்குழு நெகிழ்ச்சி நன்றி!

அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிவருகிறது.

கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களை நகைச்சுவை, பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கலந்து இத்திரைப்படம் சொல்லியிருக்கிறது.

இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழாவில், படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு படக்குழுவினர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

விழாவில் பேசிய நடிகர் அர்ஜூன் தாஸ்,

படம் வெளியான முதல் காட்சியில் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவரைப் போலப் பதற்றமாக இருந்ததாகவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும் தியேட்டர்களில் குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் காட்டிய அன்பும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தமக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், படப்பிடிப்பு தளத்தை எப்போதும் நகைச்சுவையால் நிரப்பிய யோகி பாபு மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிறகும் அர்ப்பணிப்புடன் உழைத்த வடிவுக்கரசி அம்மா போன்ற மூத்த கலைஞர்களுடன் இணைந்து நடித்தது பெருமையளிப்பதாகக் கூறினார். பட வெளியீட்டிற்கு உதவிய டெல்டா ஸ்டுடியோஸ் மற்றும் அம்சா நிறுவனங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசுகையில்,

ஓடிடி தளங்களின் வருகையால் சிறிய படங்கள் திரையரங்கிற்கு மக்களை வரவழைப்பது சவாலாக உள்ள இக்காலத்தில், நல்ல உள்ளடக்கம் கொண்ட இப்படத்தை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து 25-வது நாள் வெற்றியை அடைய வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தமக்கு ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்த நண்பர்கள், கதையை நம்பி முதலீடு செய்த இணை தயாரிப்பாளர்கள் சித்து, அருண் மற்றும் உலகளவில் 300-க்கும் மேற்பட்ட திரைகளில் படத்தை வெளியிட்ட டி-சீரிஸ், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தார்

எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பையும், நடிகர்களின் தனித்துவமான பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

குறிப்பாக, “இறந்தாலும் படப்பிடிப்பு தளத்தில்தான் இறக்க வேண்டும்” என்று வடிவுக்கரசி அம்மா காட்டிய சினிமா மீதான காதலும், மற்ற கதாபாத்திரங்களுக்கும் போஸ்டரில் சம இடம் தர வேண்டும் என்று அர்ஜூன் தாஸ் காட்டிய பெருந்தன்மையும் தமக்கு நெகிழ்ச்சியைத் தந்ததாகக் கூறி, படக்குழுவினர் அனைவரும் தங்களது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.