‘டார்க் ஜெயண்ட்’ திரைப்படத்தினை என். லோகேஸ்வரன் தயாரித்திருக்க, கே.எஸ்.கிஷான் இயக்கியிருக்கிறார். இதில் அயலி மதன், சோனியா அகர்வால், கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஆதர்ஷ் மற்றும் ஜோவிதா லிவிங்ஸ்டன், அமுதவாணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: விக்னேஷ் ராஜா. ஒளிப்பதிவு : சங்கீத் மணிகோபால்.
கடன் பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் நாயகன் ஆதர்ஷ், கிராமத்தில் இருக்கும் பூர்வீக சொத்துக்களை விற்க, தனது மனைவி மற்றும் தங்கையுடன் வருகிறார். பாழடைந்த நிலையிலிருக்கும் ஒரு பங்களாவில் அவரது தாத்தா படுத்த படுக்கையாக இருக்கிறார். அமானுஷ்யம் நிறைந்த அந்த பங்களாவை சுத்தம் செய்து அதை விற்கும் முயற்சியில் இறங்குகிறார். முதலில் சாதாரணமாக செல்லும் நாட்கள் போகப் போக கொடூரமானதாக மாறுகிறது. அதை முழுமையாக உணரும் தருணத்தில், அவர்கள் ஒரு சாத்தானின் பிடியில் இருப்பது தெரிய வருகிறது. அதோடு, ஆதர்ஷின் மனைவி ஜோவிதா லிவிங்ஸ்டன் வயிற்றிலிருக்கும் கருவை பலி கேட்கிறது. அதற்கான ஏற்பாடுகளை ஆதர்ஷின் தாத்தா செய்வது தெரிந்து அனைவரும் திகிலடைகின்றனர். சாத்தானின் பிடியிலிருந்து தப்பித்தார்களா? என்ன நடந்தது? ஏன்பது தான், டார்க் ஜெயண்ட் திரைப்படத்தின், நெஞ்சை பதற வைக்கும் திரைக்கதை.
நாயகன் ஆதர்ஷ்சின் விக்கைத்தவிர அவரது நடிப்பு, வசன உச்சரிப்பு அனைத்தும் நன்றாக இருக்கிறது. இயக்குநருக்கும் அவருக்கும் தனிப்பட்ட பகையா? தெரியவில்லை.
நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் ஜோவிதா லிவிங்ஸ்டன், அளவான நடிப்பினை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். ஆதர்ஷ்சின் தங்கையாக நடித்திருப்பவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். இவரின் காதலராக வருபவர் சிரிக்க வைக்க முயற்சித்து தோற்றுப் போகிறார். நாயகனின் நண்பனாக வரும் அமுதவாணன் ஓகே வான நடிப்பு. அமுதவாணனைத் தேடி வரும் இன்ஸ்பெக்டர் அய்யோ! அவர்து மேனரிஸமும், நடிப்பும் படுத்தி எடுக்கிறது. சாத்தானின் பலி வாங்கும் கதையை தொடங்கும் அருவி மதன், அவரது மனைவி சோனியா அகர்வால், குறைவான காட்சிகளே நடித்திருந்தலும் மனம் நிறைகின்றனர். ஒரு சில காட்சிகளில் நடித்துள்ள கே.பாக்யராஜ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால் மற்றும் இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜா இருவரும் திரைக்கதை சுவாரசியத்திற்கு பலமாக இருக்கின்றனர். பார்வையாளர்களின் மனதில் திகில் விலாகத வண்ணம், காட்சிகளை திகிலூட்டும் வகையில் மேம்படுத்தியுள்ளனர். இடைவேளைக்கு முன்னர் உருவமே இல்லாமல் காட்சிகளாலும், இசையாலும் பயமுறுத்துகின்றனர். இடைவேளைக்குப்பிறகு வழக்கமான பாணியில் செல்லும் காட்சிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், சோர்வையும் கொடுக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கே.எஸ்.கிஷான், நாயகனின் விக் உள்ளிட்ட சில குறைகளை தவிர்த்து, திரைக்கதையை நேர்த்தியாக வடிவமைத்திருந்தால், டார்க் ஜெயண்ட் திக்.. திக்.. திகில் படமாக திகிலடைய வைத்திருக்கும்!