வட சென்னை பேக்ட்ராப்பின் பெஞ்ச்மார்க்! ‘டைனோசர்ஸ்’ – விமர்சனம்!

அறிமுக இயக்குநர் எம். ஆர். மாதவன் (இயக்குநர் சுராஜின் உதவியாளர்?) இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘டைனோசர்ஸ்’. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், மாறா, மானேக்‌ஷா, அருண், சாய் பிரியா, யாமினி சந்தர், இயக்குநர் ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ரமணா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

‘கேலக்ஸி பிக்சர்ஸ்’ தயாரித்துள்ள ‘டைனோசர்ஸ்’ படத்தினை, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வழக்கமான வடசென்னை கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது, டை நோ சார் (Die No Sirs) என்பதே, டைனோசர்ஸ். டைட்டிலில் வித்தியாசமும், புதுமையும் காட்டிய இயக்குநர் பரபரப்பான திரைக்கதையிலும் அதே வித்தியாசத்தையும் புதுமையையும் காட்டியிருக்கிறார்.

புதுமையான வாழ்க்கை வாழ நினைக்கும், பழைய ரௌடி துரை (மாறா). ரௌடிகளின் சகவாசமே வேண்டாம் என இருக்கும் மண்ணு (உதய் கார்த்திக்). இந்த இருவரும் சூழ்ச்சியாலும், சந்தர்ப்ப வசத்தாலும் வட சென்னை பகுதியின் இருவேறு கேங்ஸ்டர்களுக்கு இடையே சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களின் நிலைமை என்ன ஆனது? என்பதே ‘டைனோசர்ஸ்’ திரைப்படத்தின் பரபரப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

கத்தியை எடுத்தவன், கத்தியில் சாவான் என சொல்லும் இதுவும் ஒரு கேங்ஸ்டர் படமே. இருந்தாலும், படம் முழுவதும் வரும் மெட்ராஸ் பாஷையும், நடிகர்களின் நடிப்பும், அதீத படுத்தப்படாத காட்சியமைப்பும் ரசிக்க வைக்கிறது.

கேங்ஸ்டர்கள், இளைஞர்களை எப்படி அடிமையாக வைத்துக் கொள்கிறார்கள். அவர்களை எப்படி கைப்பாவையாக பயன்படுத்துகிறார்கள், என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். சாலையார் (மானேக்‌ஷா) ஒவ்வொரு முறையும் மண்ணுவை தன்னுடைய கேங்கிற்குள் இழுக்க முயற்சிக்கும் போது நக்கலடித்தபடி அதில் மாட்டாமல் வெளியேறுவதும் நல்ல காட்சிகள். அந்த சூழலில் இருக்கும் இளைஞர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சி.

மண்ணுவின் அண்ணன் தனா (ரிஷி ரித்விக்), தனக்கு பார்த்த பெண், நண்பனை மாப்பிள்ளையாக நினத்தவுடன் அவனுக்காக விட்டுக்கொடுப்பது, நண்பனுக்காக ஜெயிலுக்கு போவது எமோஷனலான காட்சிகள்.

மண்ணு, சாராயம் குடித்துவிட்டு போலீஸிடமும், கேங்ஸ்டர் சாலையாரிடமும் நக்கலடிக்கும் காட்சி, ‘மேகம் கருக்குது மின்னல் அடிக்குது’ பிஜிஎம் ஒலிக்க, கிணற்றுக்குள் இருக்கும் நண்பர்கள் மீது மூத்திரம் அடிக்கும் காட்சிகள், ஜாலி.

துரை (மாறா) கொலை செய்யப்படும் காட்சி ‘டெரர்’. வட சென்னை படத்தில் ராஜன் (அமீர்) கொல்லப்படும் காட்சியை அசால்ட்டு பண்ணிவிட்டது இந்தக் காட்சி.

முதல் பாதி முழுவதும் விறுவிறுப்பான திரைக்கதையினால் சீட் முனையில் இருக்க வைத்துவிடுகிறார், இயக்குநர் எம். ஆர். மாதவன். இடைவேளை காட்சி அட்டகாசம்.

இடைவேளைக்கு பிறகு, பரபரப்பாக சென்ற திரைக்கதையில் தொய்வு! இயக்குநர் ரமணா சம்பந்தப்பட்ட பில்டப் காட்சிகள், க்ளைமாக்ஸ், எல்லாமே சொதப்பல். இருவேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது.

கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தாலும், பரவாயில்லை.  வசனம் எழுதியிருப்பவர், மெட்ராஸின் பூர்வக்குடி!? தெரியவில்லை. தெறிக்கவிட்டிருக்கிறார்.

மெயின் கேரக்டர்களில் மண்ணுவாக நடித்திருக்கும் உதய் கார்த்திக். துரையாக நடித்திருக்கும் மாறா இருவருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் மண்ணுவின் அண்ணன் தனாவாக நடித்திருக்கும் ரிஷி, சாலையாராக நடித்திருக்கும் மானேக்‌ஷா, அருண், சாய் ப்ரியா, இயக்குநர் ரமணா என படத்தில் நடித்த அனைவருமே கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருந்தனர்.

‘வட சென்னை’ படத்தினை இயக்கியிருந்த வெற்றிமாறன், உள்ளிட்ட இயக்குநர்கள் வட சென்னையை அதீதப்படுத்தி காட்டியிருந்தனர். அதை தவிர்த்து, வட சென்னையை ‘டைனோசர்ஸ்’ மூலம் இயல்பாக காட்டியிருக்கிறார், இயக்குநர் எம். ஆர். மாதவன்.

‘டைனோசர்ஸ்’ – வட சென்னை பேக்ட்ராப்பின் பெஞ்ச்மார்க்!