‘எலக்சன்’ – விமர்சனம்!

‘ரீல் குட் பிலிம்ஸ்’ சார்பில், திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்துள்ள படம், எலக்சன். ‘சேத்து மான்’ படத்தினை இயக்கிய தமிழ் இயக்கியிருக்கிறார். உறியடி விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ரானி , ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

பிரபலமான அரசியல் கட்சியின் தொண்டன், ஜார்ஜ் மரியன். கட்சியில் அவருக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காத நிலையிலும் கட்சியே தனது உயிர் என்ற நிலையில், கட்சிக்காக உழைத்து வருகிறார். அவருடைய மகன் ‘உறியடி’ விஜய்குமார். அரசியலுக்கும் அவருக்கும் வெகுதூரம். அரசியலில் நாட்டமில்லாதவர். ஒரு சூழ்நிலையில், விஜய்குமார் அரசியலுக்குள் நுழைகிறார். இதனால், அவருடைய வாழ்க்கை வேறுவிதமாக திசைமாறுகிறது. வீடு, நகை எல்லாவற்றையும் விற்று. தேர்தலில் நிற்கிறார். வெற்றி பெற்றே ஆகவேண்டிய சூழலில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதே ‘எலக்சன்.’

அரசியல் படங்கள் எத்தனையோ வந்திருந்தாலும், எலக்சன் வித்தியாசமான அரசியல் படமாக இருக்கிறது. விஜய் குமார், ‘அயோத்தி’ புகழ் ப்ரீத்தி அஸ்ரானி , ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியன், நாச்சியாள் சுகந்தி என, படத்தில் நடித்த அத்தனை பேரும், சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் குமார், எதார்த்தமான நடிப்பினை கொடுத்துள்ளார். காதலனாகவும், கணவனாகவும், இளம் அரசியல்வாதியாகவும், தந்தையின் மீதான பாசம், கோபம், காதல் என பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி கிளப்பியிருக்கிறார்.

நாயகிகளாக ரிச்சா ஜோஸி மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி இருவரும் தங்களது கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள். இதில், ப்ரீத்தி அஸ்ரானிக்கு அழுத்தமான கதாபாத்திரம். மிகச்சிறப்பாக நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஜய்குமார் சகோதரியின் கணவராக நடித்திருக்கும் பாவல் நவகீதன், ‘கனி’ என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் சக நடிகர்களை ஓரம்கட்டிவிடும் நடிப்பினை இயல்பாக வெளிப்படுத்தி, ரசிகர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறார்.

ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் அப்பாவி தொண்டனை நினைவு படுத்துகிறார், ஜார்ஜ் மரியன்.

நண்பனாக இருந்து பகைவனாக மாறும் வில்லன் கதாபாத்திரத்தில் திலீபன், அநேக அரசியல் வாதிகளை நினைவூட்டுகிறார்.

இவர்களை மட்டுமின்றி படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரனின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது.

இயக்குநர் தமிழின் திரைக்கதைக்கேற்ற, வசனங்களை அவருடன் சேர்ந்து அழகிய பெரியவனும், விஜயகுமாரும் எழுதியுள்ளனர். பல இடங்களில் வசனங்கள் கை தட்டல் பெறுகின்றன.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு, சிறப்பு.

கோவிந்த் வசந்தாவின் இசையில், காதுகளை சேதபடுத்தாத பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

இயக்குநர் தமிழ், உள்ளாட்சி தேர்தலை கருவாக வைத்து, அதைச்சுற்றி நடக்கும் அத்துனை அயோக்கியத்தனங்களையும், எளிதாக எல்லோருக்கும் புரியும்படி, காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்தப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களை எல்லோரும் ஏதோ ஒரு தடவை சந்தித்திருப்பது போல் இருக்கும்.

அரசியலில் நாம் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பது படத்தை பார்த்த பிறகு புரியும். பிண அரசியல், ஜாதி அரசியல், துரோக அரசியல் என அனைத்தையும் பார்க்கலாம்.

மொத்தத்தில், இந்த ‘எலக்சன்’ அரசியல் புரிதலுக்கான பாடம்.