டொராண்டோ மிட்நைட் மேட்னஸ் பிரிவில் சாதனை படைத்த ‘ஹாஃப்’!

Samjad's Actioner Becomes the First Malayalam Film to Screen at Midnight Madness in Toronto!

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) திரையிடப்பட்டு, மலையாள சினிமா வரலாற்றில் ‘ஹாஃப்’ (HALF) திரைப்படம் ஒரு புதிய உலகளாவிய சாதனையை படைத்துள்ளது.

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற இந்த விழாவின் ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் தேர்வாகித் திரையிடப்பட்ட முதல் மலையாள படம் என்ற பெருமையை ‘ஹாஃப்’ பெற்றுள்ளது. டொராண்டோவில் உள்ள திரையரங்கில் படம் திரையிடப்பட்ட தொடக்கம் முதல், படம் முடிந்த பிறகு நடந்த கேள்வி-பதில் அமர்வு வரை அரங்கம் முழுவதும் பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது.

‘ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ்’ சார்பில் ஆன் சஜீவ் மற்றும் பி.கே. சஜீவ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், அதன் விறுவிறுப்பான கதைக்களத்தாலும் காட்சி அமைப்புகளாலும் உலக ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

திரையிடலுக்குப் பின் நடந்த கலந்துரையாடலில் படத்தின் இயக்குநர் சம்ஜாத், தயாரிப்பாளர்கள், நாயகன் ரஞ்சித் சஜீவ், நாயகி ஐஸ்வர்யா ராஜ், இசையமைப்பாளர் மிதுன் முகுந்தன் மற்றும் ஒலி வடிவமைப்பாளர் விஷ்ணு கோவிந்த் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையாளர்களின் கேள்விகளுக்குச் சுவாரசியமாகப் பதிலளித்தனர்.

படத்தின் முக்கியச் சிறப்பம்சமாக, சர்வதேசச் சண்டை பயிற்சியாளர் வெரி ட்ரை யூலிஸ்மேன் (Very Tri Yulisman) அமைத்துள்ள மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றன. பப்பீனுவின் ஒளிப்பதிவு, மகேஷ் புவனெந்தின் படத்தொகுப்பு, மிதுன் முகுந்தனின் இசை மற்றும் விஷ்ணு கோவிந்தின் ஒலி வடிவமைப்பு ஆகியவை படத்தின் விறுவிறுப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த ரஞ்சித் சஜீவ் மற்றும் ஐஸ்வர்யா ராஜின் நுட்பமான நடிப்பும் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இத்திரைப்படத்தை வடஇந்தியாவில் முன்னணி நிறுவனங்களான எக்செல் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஏ.ஏ. ஃபிலிம்ஸ் இணைந்து வழங்குகின்றன. படத்தின் சர்வதேச விற்பனை உரிமையை ஐரோப்பிய நிறுவனமான ‘பெஸ்ட் ஃபிரண்ட் ஃபோரெவர்’ கைப்பற்றியுள்ளது. டொராண்டோ திரைப்பட விழாவில் கிடைத்துள்ள இந்த வரலாற்று வரவேற்பின் மூலம், ‘ஹாஃப்’ திரைப்படம் உலகளவில் மலையாள சினிமாவிற்கு ஒரு புதிய அடையாளத்தையும் பெரிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.