ஜீ. வி. பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கதையின் நாயகனாக நடிக்கும் ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கிருபாகரன் பட தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாட்சி பணியாற்றும் இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதுகிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.