வரலாறு முக்கியம் – விமர்சனம்!

‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ தயாரிப்பில் ஜீவா, காஷ்மிரா பர்தேசி, பிரக்யா நாக்ரா, சித்திக், விடிவி கணேஷ், கே எஸ் ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், ‘வரலாறு முக்கியம்’. இந்த படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கி இருக்கிறார். எப்படி இருக்கிறது?

கே.எஸ்.ரவிக்குமார் – சரண்யா பொன்வண்ணன் தம்பதியினரின் மகன், ஜீவா. இவர்கள் குடியிருக்கும் தெருவிற்கு சித்திக், தன்னுடைய மகள்கள் காஷ்மிரா பர்தேசி, பிரக்யா நாக்ரா உள்ளிட்ட குடும்பத்தினருடன் புதிதாக குடி வருகிறார்.  முதலில் பிரக்யா நாக்ராவை காதலிக்கும் ஜீவா பின்னர் காஷ்மிரா பர்தேசியை காதலிக்கிறார். ஜீவா – கஷ்மிரா பர்தேசியின் காதல் விவகாரம் சித்திக்கிற்கு தெரிய வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அவர், வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது, என்பதே வரலாறு முக்கியம் படத்தின் கதை.

ஜாலியாக ஊர்சுற்றும் யுடியுபர் இளைஞராக ஜீவா, அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். அக்கா தங்கைகளான காஷ்மிரா பர்தேசி, பிரக்யா நாக்ரா இருவரையும் விரட்டி விரட்டி காதலிக்கும் காட்சிகளில் ஜாலியாக வலம் வருகிறார். அவர் நடித்துள்ள ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களிடமிருந்து விசில் பறக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ‘லேடி’ கெட்டப்பில் அவர் செய்யும் அலும்புகள் அனைவரையும் ஈர்க்கிறது. அதோடு விடிவி கணேஷ் அடிக்கும் லூட்டிகள் தியேட்டரை சிரிப்பலையில் குலுங்க வைக்கிறது.

இளமை ததும்பி வழியும் நாயகிகள் காஷ்மிரா பர்தேசி, பிரக்யா நாக்ரா இருவரும் ரசிகர்களை கிறங்கடிக்கிறார்கள். அதிலும் காஷ்மிரா பர்தேசியின் இளமை வனப்பு, இளைஞர்களை கொள்ளை கொள்கிறது. மறு பக்கம் பிரக்யா நாக்ரா பாவடை, சட்டையில் வந்து படபடப்பு ஏற்படுத்துகிறார்.

விடிவி கணேஷின் ‘டெல்லி’ அரசியலும், ஜன்னல் கண்ணாடியில் கோடு போட்டு குஜாலித்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார். டி.எஸ்.கே, சாராவை பார்த்தவுடனே சிரிக்க வைத்துவிடும் அவரது கதாபாத்திரம், ‘கிறிஸ் கெயில்’ மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சாமிநாதன் என அனைவரும் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள்.

ஜீவாவின் அப்பாவாக நடித்திருக்கும்  கே.எஸ்.ரவிக்குமார், அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், நாயகிகளின் தந்தையாக நடித்திருக்கும் மலையாள நடிகர், இயக்குனர் சித்திக் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

சக்தி சரவணனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி! ஷான் ரஹ்மானின் இசை இனிமை!

கலகலப்பான திரைக்கதையின் மூலம் இளம் வயது ரசிகர்களை கவர்ந்திருக்கிறார், இயக்குநர் சந்தோஷ் ராஜன்.

‘வரலாறு முக்கியம்’  இளைஞர்களுக்கான ஜாலி ஸ்பெஷல்!