‘இடியட்’ – விமர்சனம்.

சந்தானம் நடித்து வெற்றி பெற்ற ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’ ஆகிய படங்களை இயக்கிய, இயக்குநர் ராம்பாலா இயக்கி இருக்கும் மூன்றாவது படம் ‘இடியட்’. இதில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் இரண்டு படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவதாக வெளிவந்திருக்கும் இந்தப்படம் எப்படி இருக்கிறது, பார்ப்போம்.

ஜமீன்தாரின் சொத்தை அபகரிக்க அவருடன் மொத்த குடும்பத்தையும், ஆனந்த்ராஜின் அப்பாவும் அவரது நண்பரும் கொலை செய்கின்றனர். இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை மற்றும் திரைக்கதை.

இயக்குநர் ராம்பாலா வழக்கமான காமடி ஸ்டைலில் களம் கண்டு இருக்கிறார். படத்தின் முதல் பாதி சற்று சிரிக்க வைக்கிறது. குறிப்பாக ஆனந்த்ராஜ் மற்றும் ஊர்வசியின் காமெடிகள் பல இடங்களில் சிரிப்பினை வரவழைக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் ரவிமரியா & கூட்டனியின் காட்சிகள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. மொக்கையிலும் மொக்கை.. மரண மொக்கை!

படத்தில் எந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இல்லை. அதுபோலவே நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இல்லை. இதுவே படத்தின் பெரும் பலவீனம். பயமுறுத்தவும், சிரிக்க வைக்கவும் நிறைய வாய்ப்புகள் இருந்த போதிலும் ஏனோ.. தானோவென படமாக்கி இருக்கிறார்கள். இதனால மிர்ச்சி சிவாவின் தீவிர ரசிகர்களும் ஏமாற்றம் அடைகிறார்கள்.

பேய் படங்களில் கதாநாயகிகளுக்கு அதிக காட்சிகள் இருக்கும் ஆனால் இந்தப்படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணிக்கு அதுவும் இல்லை. அதுபோலவே அக்‌ஷரா கவுடாவுக்கும் பெரிதாக இல்லை.

சிங்கமுத்து, ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, மயில்சாமி என பல சிரிப்பு நடிகர்கள் இருந்தாலும் சிரிப்பு வரவே இல்லை.

இயக்குநர் ராம்பாலா தன்னுடைய முதல் இரண்டு படங்களைப் போலவே மூன்றாவது படமான  ‘இடியட்’  படத்திலும் பேயின் துணையோடு சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார். ஆனால் ரசிகர்களுக்குத்தான் சிரிப்பு வரவில்லை.