‘செல்ஃபி’ – விமர்சனம்.

‘DG ஃபிலிம் கம்பெனி ‘சார்பில் சபரீஷ் தயாரித்துள்ள படம் ‘செல்ஃபி.  ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் கலைப்புலி. எஸ். தாணு வெளியிட்டுள்ளார். இப்படத்தில், ஜி வி பிரகாஷ் குமார், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ்  மேனன், குணாநிதி, சங்கிலி முருகன், வாகை சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குனர் மதிமாறன்.

தமிழகத்தில் நடந்துவரும் கல்வி கொள்ளையை முன்னிலைப்படுத்தி, யாரும் தொடாத களத்தை தொட்டிருக்கிறார், அறிமுக இயக்குநர் மதிமாறன். பாராட்டுகள்.

இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிய போதிய புரிதல் இல்லாத, அவருடைய அப்பா ‘வாகை’ சந்திரசேகரின் வற்புறுத்தலின் பேரில், இன்ஜினியரிங் காலேஜில் சேருகிறார், ஜி.வி.பிரகாஷ்.  அங்கே நடைபெற்றுவரும் மருத்துவக்கல்லூரிக்கான இடம் பெற்றுத்தரும் புரோக்கர் தொழிலில் அதிக வருமானம் கொட்டுவதைப் பார்த்து வாய்பிளக்கிறார். தானும் அந்த புரோக்கர் தொழிலை செய்ய முன் வருகிறார். இதனால் அவருடைய வாழ்க்கை, தடம் மாறி, ஒரு உயிர்ப்பலியும் நடக்கிறது.

எதற்காக, அந்த உயிர்ப்பலி என்பது தான், செல்ஃபி படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

தமிழ்நாட்டில் கொடி கட்டி பறக்கும் கல்லூரிகளின் வியாபார போக்கினையும், அதை செயல்படுத்தி வரும் புரோக்கர்களையும் அப்பட்டமாக படமாக்கி இருக்கிறார், அறிமுக இயக்குநர், மதிமாறன். டாக்டர், இன்ஜினியரிங் இடத்திற்காக ஆள்பிடிக்கும் தொழிலை கல்லூரிகள் எப்படி போட்டி போடுகின்றன என்பதை இதைவிட யாரும் எழுதில் சொல்லிவிடமுடியாது! கல்லூரியில் படிக்கும் மாணவர்களே அதை செய்வதையும் சுட்டிக்காட்டியிருப்பது , கல்லூரிகளில் இன்றும் நடந்து வரும் ஒரு உண்மை சம்பவமே.

இந்த சம்பவத்தை பரபரப்பான திரைக்கதை அமைத்து, திருப்பங்களையும் கொடுத்து ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்து இருக்கும் இயக்குநர் மதிமாறன் பாராட்டப் படவேண்டியவர்.

கல்லூரி புரோக்கராக வரும் கௌதம் மேனன் மிரட்டி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷை அலட்சியமாகவும், ஆச்சர்யமாகவும் பார்க்கும் காட்சிகளில் மிரட்டல். அதைவிட க்ளைமாக்ஸில் தன்னுடைய கைத்தடிகளுடன் நடக்கும் சண்டைக்காட்சியில் சூப்பர். ஆர்ப்பாட்டமில்லாத சூப்பர் ஃபைட்.

வயதிற்கே உரிய அலட்சியமான, தறிகெட்ட இளைஞனாக ஜி.வி.பிரகாஷ். பாசம், காதல், நட்பு , இழப்பு என அனைத்து உணர்ச்சிகளையும், அசால்ட்டாக பிரதிபலிக்கிறார். வர்ஷா பொல்லம்மா கிடைத்த சில காட்சிகளிலும் சிரத்தையுடன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் தயாரிப்பாளர் குணாநிதி, நன்றாகவே நடித்துள்ளார்.

கல்லூரியின் தலைவராக நடித்திருக்கும் சங்கிலி முருகன் அருமையாக நடித்துள்ளார். ஜி வி பிரகாஷின் இசை ஓகே. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு.

ஒருமுறை பார்க்க வேண்டிய படம்.