‘மன்மத லீலை’ – விமர்சனம்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஷோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்முருதி வெங்கட், ரியா சுமன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம், ‘மன்மத லீலை’. ‘மாநாடு’ படத்திற்கு பிறகு இப்படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு சற்று அதிகம். அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்.

அஷோக் செல்வன் கல்லூரி காலத்தில் இருந்தே பெண்கள் விஷயத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளை. அவர் ஒரு பிரபல ஃபேஷன் டிசைனர். ஒரு நாள் அவரது மனைவி ஸ்மிருதி வெங்கட் குழந்தையுடன் வெளியில் செல்ல, எதிர்பாராமல் அவர் வீட்டிற்கு வரும் ரியா சுமனுடன் அன்றிரவை உல்லாசமாக கழிக்கிறார். இதனிடையே வெளியில் சென்ற மனைவி வீட்டுக்கு திரும்பி வருகிறார். இதன் பின்னர் என்ன நடக்கிறது. என்பது தான் ‘மன்மத லீலை’ படத்தின் கதை.

இருவேறு காலக் கட்டங்களில் நடக்கும் சம்பவத்தை ஒன்றினைத்து சொல்லும் திரைக்கதை சுவாரஷ்யம் ஏற்படுத்துகிறது. அஷோக் செல்வன் நடிப்பினில் குறையில்லை. நிறைவுடனே செய்திருக்கிறார். சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் என இருவரிடமும் அவர் காட்டும் நெருக்கம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தும். பல இடங்களில் மிக நெருக்கமான காட்சிகள் வைக்க வாய்ப்பிருந்தும் பூனை கருவாட்டை வெறுப்பது போல் புறந் தள்ளி இருக்கிறார்? இயக்குநர் வெங்கட்பிரபு!! படத்தின் டீசர் மற்றும் டிரைலரை பார்த்து வருபவர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கும்.

கதை சாதரணமாக இருந்தாலும், சற்று வித்தியாசமான திரைக்கதையும் அதனை தொடர்ந்து வரும் ட்விஸ்ட்களும், க்ளைமாக்ஸும் கவனிக்க வைக்கின்றன.

ஜெயப்பிரகாஷ், பிரேம்ஜி, கருணாகரன், கயல் சந்திரன் என மற்ற கதாப்பாத்திரங்கள் கதைக்கு ஏற்ப அளவாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ஜெயப்பிரகாஷின் கதாப்பாத்திரம் கவனிக்க வைக்கிறது.

இசையமைத்திருக்கிறார் பிரேம்ஜி அமரன். அவரது பெரியப்பாவின் இசையில் இடம்பெறும் பழைய பாடலை நுழைத்து ரசிக்க வைத்து இருக்கிறார்.  பின்னணியும் இசையும் ஓகே தான்.

படம் முழுவதும் சில லொக்கேஷன்களில் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அயற்சி இல்லை. ஒளிப்பதிவாளர் தமிழகனுக்கு பாராட்டுகள்.

நண்பர்களுடன் ஜாலியாக சென்று பார்க்கலாம்.