‘காட்டேரி’ – விமர்சனம்!

‘யாமிருக்க பயமே’ என்ற சூப்பர் டூப்பர் படத்தினை இயக்கிய இயக்குனர் ஃடீகேவின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம், ‘காட்டேரி’. சிரிக்க வைக்கிறதா, இல்லை மிரட்டுகிறதா? எப்படி இருக்கிறது, பார்க்கலாம்.

வைபவ் தனது மனைவி சோனம் பாஜ்வாவுடனும் கருணாகரன், ரவி மரியா, ஆத்மிகா உள்ளிட்ட கூட்டாளிகளுடனும் தங்கப் புதையலைத் தேடி ஒரு காட்டுக்குள் இருக்கும் கிராமத்திற்கு செல்கிறார். அங்கே இருக்கும் மனிதர்கள் வித்தியாசமாக தோன்றுகிறார்கள். பகலில் சாதாரணமாக இருக்கும் அவர்கள் இரவு நேரத்தில் பேய்களாக மாறிவிடுகிறார்கள். இதனால் அந்தக்கிராமத்தை விட்டு வெளியேற நினைக்கிறார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதோடு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தான் ‘காட்டேரி’ படத்தின் கதை.

வழக்கமான பேய்க்கதையின் டெம்ப்ளேட்டில் படம் முழுவதும் டபுள் மீனிங் வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர் டீகே. ஒரு சில காட்சிகள் மட்டுமே சிரிப்பினை வரவழைக்கிறது. பல காட்சிகள் மொக்கை ரகம். மொத்தப்படத்தினையும் அலட்டிக்கொள்ளாமல் சுருட்டிக்கொடுத்து இருக்கிறார்.

வைபவ், கருணாகரன், பொன்னம்பலம், ரவி மரியா, ஜான் விஜய், மைம் கோபி, வரலக்‌ஷ்மி, மதுமிதா, ஆத்மிகா, சோனம்பாஜ்வா என பெரிய நடிகர் கூட்டத்தையே நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கேற்ற காட்சிகள் அமைப்பதில்  இயக்குனர் தடுமாறி இருக்கிறார். கருணாகரன் சற்றே ஆறுதல் தருகிறார். அவர் பேசும் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. குறிப்பாக சோனம் பாஜ்வாவிடம் அவர் அடிக்கும் டைமிங் காமெடியை சொல்லலாம்.

வரலக்‌ஷ்மி வந்த பிறகு ஏதாவது சுவாரஷ்யம் ஏற்படும் என நினைத்தால்.. அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.என்.பிரசாத் ஆகியோரின் உதவியால் சில காட்சிகளுக்கு மட்டும் பலம் சேர்கிறது.

‘யாமிருக்க பயமே’ படத்தினை நினைத்து வருபவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றம் அளிக்கும்.