‘குருதி ஆட்டம்’ – விமர்சனம்!

அதர்வா, ப்ரியா பவானி ஷங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார், கண்ணா ரவி ஆகியோர் நடிப்பினில் ‘எட்டுத் ‘தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம், ‘குருதி ஆட்டம்’. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கும் இந்தப்படம் எப்படி இருக்கிறது.

கட்டப்பஞ்சாயத்து செய்யும் ராதிகா சரத்குமார் ஒட்டு மொத்த மதுரையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். அவருக்கு பக்க பலமாக இருப்பவர் ராதாரவி. இவர்கள் இருவரும் நினைப்பது மட்டுமே மதுரையில் நடக்கும். போலீஸும் இவர்களாது ஆட்சிக்கு உட்பட்டவர்களே.

ராதிகா சரத்குமாரின் மகனும், ராதாரவியின் மகனும் நண்பர்கள். இவர்களது கபடி அணியும், மதுரை அரசு மருத்துவமனையில் ‘வார்டு பாயாக’ இருக்கும் அதர்வாவின் கபடி அணியும் ஒரு போட்டியில் எதிரெதிரே மோதுகின்றன. இதில் அதர்வாவின் அணி வெற்றி பெறுகிறது. இதனால் ராதாரவியின் மகனுக்கும் அதர்வாவுக்கும் பகை மூளுகிறது. இதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் தான் குருதி ஆட்டத்தின் கதை.

குருதி ஆட்டத்தின் தொடக்கம் அமர்க்களமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் நாம் பார்த்து சலித்த காட்சிகள். இதெல்லாம் எப்படி நடக்கும். சாத்தியமா? என பல கேள்விகளுக்கு இடம் கொடுக்கிறது உணர்வற்ற திரைக்கதை. திரையில் பறக்கும் அரிவாள் திரையினை விட்டு நம் முகத்தை பதம் பார்த்துவிடுமோ? என அச்சம் ஏற்படுகிறது. குருதி ஆட்டம் என பெயர் வைத்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஒவ்வொரு காட்சியிலும் செயற்கை தனம். க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சுத்த பேத்தல்.

அதர்வா! கதாபாத்திரம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை! வில்லனாக வரும் வாத்சன் சக்கரவர்த்தி கவனம் பெறுகிறார். அவருடைய உடல்வாகு கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. கண்களில் காட்டும் கொலை வெறி மிரட்டுகிறது. ப்ரியா பவானி ஷங்கரின் நடிப்பில் குறை இல்லை. ராதிகாவின் கதாபாத்திரம் அவருடைய நடிப்பினால் கெத்தாக இருக்கிறது.. ராதாரவி ஒரு சில காட்சிகளில் வந்து கலகலப்பினை ஏற்படுத்துகிறார்.

ராதிகாவின் மகனாக நடித்திருக்கும் கண்ணா ரவி சிறப்பாக நடித்து இருக்கிறார். இவரைப் போலவே வினோத் சாகர் பிகராஷ் ராகவன் உள்ளிட்டவர்களின் நடிப்பும்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறாராம், நம்பமுடியவில்லை.

காற்றில் கத்தி சண்டை போடும் ஆட்டமே குருதி ஆட்டம்!