‘பொய்க்கால் குதிரை’ – விமர்சனம்!

ஒரு விபத்தில் மனைவியையும், தனது ஒரு காலையும் இழந்தவர் பிரபு தேவா. தனது மகள் மட்டுமே அவரது உலகம். தனது மகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத்துணிந்தவர். இந்நிலையில் அவர் வரலக்‌ஷ்மியின் மகளை கடத்துகிறார். ஏன், எதற்கு என்பது தான், ‘பொய்க்கால் குதிரை’யின் சுவாரஷ்யமான கதை.

படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்கள் ஏற்று நடித்துவரும் பிரபு தேவா, இப்படத்தில் ஒற்றைக்காலுடன் சிறப்பாக நடித்து இருக்கிறார். கால் இல்லாமலும், செயற்கை காலுடனும் மாறுபட்ட நடிப்பினை கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருக்கிறார். அவரது மகளுக்காக வரலக்‌ஷ்மியிடம் போராடும் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.. நடனப்புயல் பிரபு தேவா ஒற்றைக்காலுடன் ஆடியிருக்கும் பாடலுக்கு ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

ஓரிரு காட்சிகளில் மட்டுமே தலைகாட்டுகிறார் ரைசா வில்சன்.

தைரியமான பெண்ணாகவும், மகளை பறிகொடுத்துவிட்டு கதறும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து இருக்கிறார், வரலக்‌ஷ்மி சரத்குமார். கதாபாத்திரத்திற்கேற்ற சரியான தேர்வு.

ஜான் கொக்கேனின் நடிப்பு பாராட்டும்படி இருந்தாலும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முன்னரே யூகிக்க முடிகிறது. இதனால் சுவாரஷ்யம் குறைகிறது.

அயன் படத்திற்கு பிறகு குறிப்பிடும்படியான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெறுகிறார், ஜெகன். இவரது கதாபாத்திரம் அடிக்கும் ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது.

ஒரே ஒரு காட்சியில் மட்டும் தலை காட்டுகிறார் ஷாம்,

ஒற்றைக்காலுடன் நடித்திருக்கும் பிரபுதேவா சம்பந்தப்பட்ட காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளரையும்  அவரது குழுவினரையும் பாராட்டலாம். அதேபோல் நடன இயக்குனரும், சண்டைப்பயிற்சி இயக்குனரையும் பாராட்டலாம். குறிப்பாக பஸ்ஸில் நடக்கும் சண்டைக்காட்சி ரசிக்க வைக்கிறது..

டி.இமானின் இசையில் பாடல்கள் ஒகே. பின்னணி இசை காட்சிகளை மேம்படுத்துகிறது.

இதுவரை ஐட்டம் படத்தின் இயக்குனராக வலம் வந்த இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார், இப்படத்தின் மூலம் நல்ல பெயரை பெற்றிருக்கிறார். திரைக்கதையில் வரும் திடீர் திருப்பங்கள் க்ளைமாக்ஸ் வரை தொடர்வதால் படத்தினை ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில், ‘பொய்க்கால் குதிரை’ வெற்றிக்குதிரை!