குலசாமி – விமர்சனம்!

‘குட்டிப்புலி’ சரவண சக்தி கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் குலசாமி. இப்படத்தின் வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியிருக்கிறார். எம்ஐகே புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (MIK Productions Private Limited) தயாரித்திருக்கிறது.

குலசாமி படத்தில் விமல், தன்யா ஹோப் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க, போஸ் வெங்கட், மகாநதி சங்கர், வினோதினி, கீர்த்தனா,

ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாங்கிட் நடித்திருக்கிறார்.

இயக்குநர் சரவண சக்தியின் மகன் ஜெய சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார்.

இயல்பான கிராமத்து இளைஞனாக நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் தனி இடம் பிடித்தவர், நடிகர் விமல். குலசாமி படத்தில் பெண்களின் பாலியல் மீதான துன்புறுத்தலை கண்டு ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். பொதுவாக கல்வியல் பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை பரவலாக நடந்து வரும் ஒரு அருவறுக்கத்தக்க செயல். பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் இந்த பாலியல் அத்து மீறல்கள் அவ்வப்போது வெளிவந்து அதிர்ச்சியடைய செய்வதும் வாடிக்கை தான். இதில் சில வருடங்களுக்கு முன்னர் அருப்புக்கோட்டை கல்லூரியில் நடந்த பாலியல் அத்து மீறல்களில் சம்பந்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது. தமிழகத்தை மட்டுமின்றி டெல்லி அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியது.

பேராசிரியை நிர்மலா தேவியை போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோதினியை சுற்றி நடக்கும் கதையம்சம் கொண்ட படம் தான், குலசாமி. அப்பாவி பெண்களுக்கு குல சாமியாகவும், அத்து மீறுபவர்களுக்கு கொல சாமியகவும் அவதாரம் எடுக்கிறார், விமல். அவர், ஆக்‌ஷன் அடிதடியில் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார். தங்கையை பறி கொடுத்த அண்ணனாகவும், ஆக்ரோஷத்தில் சூரனாகவும் பரிணாமம் காட்டுகிறார்.

1980 களில் நடப்பது போன்ற காட்சியமைப்புகள் இருந்தாலும் இப்பவும் தேவைப்படும் ஒரு படம் தான் இந்த குலசாமி.

நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப், விமலின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனா, கல்லூரி பேராசிரியையாக நடித்திருக்கும் வினோதினி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், வில்லனாக நடித்திருக்கும் ஜெயசூர்யா என படத்தில் நடித்திருப்பவர்கள் கொடுத்த கதாபாத்திரங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியிருக்கிறார். நன்றாக இருக்கிறது. ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை.

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியாக கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியிருக்கிறார், இயக்குநர் ’குட்டி புலி’ சரவணசக்தி. படத்தில் பாலியல் அத்து மீறல்களுக்கு இவர் கொடுக்கும் தண்டனை கொடூரம்! பெண்கள் கைதட்டுகிறார்கள்.

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைப்பதில் கவனம் சிதறியிருக்கிறார், இயக்குநர் சரவணசக்தி! கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் குலசாமி அதிரடி ஆக்‌ஷன் வெற்றி படமாக அமைந்திருக்கும்!