ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம், ‘குரங்கு பெடல்.’ இப்படம், 1980 களின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தை, அவருடைய மகனுக்கு, சைக்கிளை ஓட்டிவிடவேண்டும் என்று கொள்ளை ஆசை. அதனால், அச்சிறுவன் சந்திக்கும் சில பிரச்சனைகள். முடிவில் தந்தை எடுக்கும் முடிவு. இவற்றை, 80 களில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை சுவாரசியமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் கமலக்கண்ணன்.
‘குரங்கு பெடல்’ படத்தில், காளி வெங்கட் , சிறுவர்கள் சந்தோஷ், ராகவன், ஞானசேகர், ஏ.இ. சாய் கணேஷ் , ரதிஷ் , மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், தக்ஷனா , சாவித்திரி, செல்லா, குபேரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில், சந்தோஷ் “மாரி” கதாபாத்திரத்திலும் நடிகர் காளி வெங்கட் அவரது தந்தையான ‘கந்தசாமி’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு சுமி பாஸ்கரன், இசை ஜிப்ரான் வைபோதா,தயாரிப்பு சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம் ,சுமி பாஸ்கரன்.
ஒரு அழகிய, எளிய மனிதர்கள் வாழும் கிராமம். பள்ளி இறுதித் தேர்வு விடுமுறை விடப்படுகிறது. அந்த கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், ராகவன், ஞானசேகர், ரத்தீஷ், ஏ.இ.சாய் கணேஷ் ஆகிய சிறுவர்கள் விடுமுறையை ஜாலியாக கொண்டாடி வருகிறார்கள். இவர்களுக்குள் சைக்கிள் ஓட்ட ஆசை வருகிறது. சொந்த சைக்கிள் இல்லாததால் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்ட ஆசைப்படுகிறார்கள். யாருக்குமே சைக்கிள் ஓட்டத்தெரியாததால், ஒருவருக்கு ஒருவர் உதவியுடன் ஓட்டுப் பழகுகிறார்கள். சிறுவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. இவர்களில் சைக்கிள் ஓட்டத் தெரியாத காளி வெங்கட்டின் மகன் சந்தோஷ், தனியே சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டப் பழகுகிறான். அப்போது, சைக்கிளுக்கான வாடகை அதிகமாகிறது. வீட்டிற்கு தெரிந்தால், பிரச்சனையாகிவிடும் என்பதால், சைக்கிளுடன் சிறுவன் மாயமாகிறான். அவனைத் தேடி, அவனது பெற்றோர்களும், சைக்கிள் கடைக்காரரும் செல்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்த்து என்பதே, குரங்கு பெடல் படத்தின் கதை.
நடிகர் காளி வெங்கட், கதாபாத்திரத்திற்கேற்ற ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பினில் அசத்துகிறார். சைக்கிள் ஓட்டத் தெரியாத அவரை, ‘நடராஜா சர்வீஸ்’ என்று பட்டப்பெயர் வைத்து கேலி செய்வதை, கண்டு கொள்ளாதவராகவும், பிற்கு கோபப்படுபவராகவும் அருமையாக நடிப்பினை வெளிப்படுத்துகிறார். அவருக்கும் மகனுக்கும் நடக்கும் ஒரு உரையாடலில், மனம் வருந்தி உண்டியலை உடைக்கும் காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். சிறுவன் சந்தோஷ் இந்தக்காட்சியில், அல்ட்டிமேட் நடிப்பினை கொடுத்துள்ளான். அதேபோல் அப்பாவை பிறர் கேலி செய்யும் போது ஏற்படும் கோபம் என, நன்றாகவே நடித்துள்ளான்.
சந்தோஷூடன் நடித்திருக்கும் மற்ற சிறுவர்களான ராகவன், ஞானசேகர், ரத்தீஷ், ஏ.இ.சாய் கணேஷ் ஆகியோர், உடல் மொழி, வசன உச்சரிப்பு என, மண் மனம் மாறாத சிறுவர்களாகவே வலம் வருகிறார்கள்.
நக்கலைட்ஸ் டீம் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், சாவித்திரி, தக்ஷனா, செல்லப்பா ஆகியோர் படத்திற்கான தூண்களாக, தாங்கி நிற்கின்றனர். அதிலும், பிரசன்னாவுக்கும் ஜென்சனுக்கும் நடக்கும் சம்பவங்கள் சிரிப்பினை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரனின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. 1980களுக்கான கலர் கிரேடிங் செய்யாமல் அப்படியே விட்டிருந்தால், படத்தில் இடம்பெற்ற, அழகான லொக்கேஷன்கள் குளுமையாக இருந்திருக்கும்.
ஜிப்ரானின் இசை, படத்தின் பலம்.
‘சைக்கிள்’ ஓட்ட ஆசைப்படும் சிறுவனின் ஆசையை உணர்வுப்பூர்வமாக சொல்லி, நண்பர்களுக்குள் ஏற்படும் சண்டை அதன் பிறகு உருவாகும் பிணைப்பு, அப்பாவின் மீது மகன் கொண்டிருக்கும் அன்பு, அப்பா – மகன் இடையிலான பந்தம் ஆகியன் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
‘குரங்கு பெடல்’ – 40 வயது கடந்தவர்களின் ‘நாஸ்டாலஜி மொமன்ட்ஸ்!’