‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ – விமர்சனம்!

பரத், விவியாசன்த் நடிப்பில், ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுனில்குமார் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி உள்ள படம், ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ இப்படத்தின் தயாரிப்பாளர் அனூப் காலித் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆள் இல்லாத வீட்டிற்குள்ளும் பெண்கள் மட்டும் தனியே இருக்கும் வீட்டிற்குள்ளும் கொள்ளையடித்து வருகிறது ஒரு கும்பல். வழக்கம்போல் ஆள் இல்லாத ஒரு பங்களாவிற்குள் மிகப்பெரிய ஒரு தொகையை கொள்ளையடிக்க முடிவு செய்து அந்த பங்களாவிற்குள் நுழைகின்றனர். ஆனால் அந்த பங்களாவிற்குள் கட்டுமஸ்தான உடல் வாகுடன் கண்பார்வையற்ற பரத் இருப்பதை அறிந்து கொள்ளை கும்பல் அதிர்ச்சியடைகிறது. பரத்தை மீறி அவர்கள் கொள்ளையடித்தார்களா? இல்லையா? என்பது தான் ‘6 ஹவர்ஸ்’ படத்தின் கதை.

கட்டுமஸ்தான உடற்கட்டுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார் பரத். பார்வையற்ற கதாபாத்திரத்திற்கான உடல் மொழியை உணர்ந்து நடித்து இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. பூட்டிய பங்களாவிற்குள் பரத்திடம் சிக்கி தவிக்கும் கொள்ளையர்களாக அனூப் காலித், விவியாசன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். அமெச்சூர்னெஸ் படம் முழுவதும் தெரிகிறது. காட்சிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருக்கிறது. அதே சமயத்தில் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் ரசிக்க வைக்கிறது.. ஆனாலும் அந்த டிவிஸ்ட் சிலருக்கு முன்னரே தெரிந்து விடுவதற்கு வாய்ப்பும் இருக்கிறது.

இசையமைத்திருக்கிறார். கைலாஸ் மேனன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார், சினு சித்தார்த். இந்த இருவரின் பங்களிப்பிலும் படத்தின் தரம் சற்றே உயருகிறது. பாம் வெடிக்கும் காட்சியில் முரண்பாடு. பரத்தின் உதவியாளர் பாம் வெடிக்கும் காட்சியில் கொள்ளையர்களுடன் சண்டையிடுகிறார். அதே காட்சி ஃப்ளாஷ்பேக்கில் வரும் போது பரத்துடன் இருக்கிறார்!?

இயக்குநர் சுனிஷ்குமார், இதை கவனித்து இருக்கலாம். எடிட்டரும் கவனிக்காமல் விட்டுள்ளார்!

மொத்தத்தில், பரத்தின் உழைப்பு வீண்!