மாமனிதன் எனக்கு மிகவும் பிடித்தப்படம் – விஜய்சேதுபதி!

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாக கண்டுகளிக்கலாம். இதனை ஒட்டி படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது…

கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பை, தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன். நீங்கள் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்த காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு போட்ட பணம் திரும்ப வந்தால் அதுவே வெற்றி தான். திரையரங்குகளில் இந்தப்படம் நன்றாகவே போனது ஆனால் அதன் லாபம் என்பது தொக்கி நின்றது, அந்த நேரத்தில் தான் ஆஹா ஓடிடி வந்தது. அவர்களால் இன்று இப்படம் 155 நாடுகளை சென்றடைந்துள்ளது. எல்லோரும் பார்த்து பாராட்டுகிறார்கள். இதற்காக தனிப்பட்ட முறையில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். திரையரங்கில் தவறவிட்டவர்கள் ஓடிடியில் கண்டுகளிக்ககலாம். திரையரங்கில் என்ன குவாலிட்டியில் படம் இருந்ததோ அதே போல் ஓடிடியிலும் உள்ளது. தயாரிப்பாளர் யுவன் அவர்களுக்கும் நாயகன் விஜய் சேதுபதிக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது..

இந்தப்படத்தை திரையரங்கில் தவற விட்டவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, வீட்டில் இந்தப்படம் பார்ப்பவர்களுக்கு ராதாகிருஷ்ணன் நெருக்கமானவனாகிவிடுவான். மாமனிதன் குறித்து என்னிடமும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது, ஆனால் எதற்கும் நான் பதில் சொல்லவில்லை. ஒரு கதாப்பாத்திரம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்க முடியாது. நடக்க தேவையில்லை. சீனு ராமசாமி சார் போல் ஒரு படம் எடுக்க இங்கு யாரும் இல்லை. இந்தப்படம் நான் டப்பிங் பண்ணும் போது பார்க்கையில், அத்தனை உயிர்ப்புடன் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. இந்தப்படம் காலத்தால் அழியாது, காலங்கள் கடந்து நிற்கும். இந்தப்படத்தை ஆஹாவில் பார்த்து ரசியுங்கள் நன்றி.

ஸ்டூடியோ 9 பிரசாத் பேசியதாவது…

ஆர்.கே. சுரேஷ் அவர்கள் ஷீட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை. மாமனிதன் ஒரு அருமையான படைப்பு. மக்கள் செல்வன், மக்கள் இயக்குநர், யுவன் ஆகியோர் தான் இந்தப்படத்தை வெளியிட முக்கிய காரணம். தர்மதுரை போல் இந்தப்படத்தையும் மக்களிடம் சேர்த்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தான் ஆர் கே சுரேஷ் இந்தப்படத்தை வெளியிட்டார். திரையரங்கில் மக்கள் கொண்டாடிய ஒரு படத்தை ஆஹா இப்போது உலகம் முழுக்க கொண்டு சேர்க்கிறது. ஆஹாவிற்கு மிகப்பெரிய நன்றி. என்றார்.