‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற தொடர் வெற்றித் திரைப்படங்களைத் தந்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’ (Once More). ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் முன்னிலையில் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இத்திரைப்படத்தின் நாயகன் அர்ஜுன் தாஸ் விழாவில் இயக்குநரின் அர்ப்பணிப்பைக் குறித்தும், இசை உருவான விதம் குறித்தும் பேசியதாவது:
“விக்னேஷ் ஸ்ரீகாந்த் முதன்முதலில் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, ஒரு வரியை (ஒன்லைன்) மட்டும்தான் சொன்னார். அதுவே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. திரைக்கதையை முழுமையாகத் தயார் செய்த பிறகு, அவர் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்தக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். அப்போது கதையைக் கேட்ட பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இயக்குநர் விக்னேஷ் அதற்குச் சம்மதிக்காமல், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையின் ரகுவாக நடிக்க முடியும்; அவரை வைத்து மட்டும்தான் நான் இந்தப் படத்தை இயக்குவேன்’ என்று எனக்காகப் பல இடங்களிலும் மிகவும் உறுதியாக நின்றிருக்கிறார்.அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் அனைவரும் இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களின் பணிகளுக்குச் சென்றுவிட்டோம்.

ஆனால், அறிமுக இயக்குநரான விக்னேஷ் இன்றுவரை இந்தப் படத்திற்காக மட்டுமே தொடர்ந்து ஒற்றை ஆளாக நின்று உழைத்துக் கொண்டிருக்கிறார்.அதேபோல், இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் ‘ஹிருதயம்’ படம் பார்த்துவிட்டு, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்துப்போனதால் நானே அவருக்குத் தொலைபேசி மூலம் அழைத்து மனதாரப் பாராட்டினேன். அப்போது விரைவில் நாம் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் எனக் கருதினேன். எனவே, ஹேஷாமிடம் கேட்கலாம் என்று நான்தான் விக்னேஷிடம் கூறினேன். ஹேஷாமும் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் தந்துள்ளார்.
நாயகி அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்குத் தேவையான அந்த நேர்மறை ஆற்றலை (Energy) அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று முறைப்படி அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு எனது நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.மேலும், இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி இயக்குநர் விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா அந்தப் பாத்திரத்திற்குள் வந்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்துள்ளார். பல நஷ்டங்கள், பிரச்சினைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.”

இத்திரைப்படத்தின் நாயகி அதிதி ஷங்கர் விழாவில் தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து பேசியதாவது:”
முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி. ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தைத் திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி. நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கடினமான, சோதனையான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டிருந்த போதுதான் இந்தத் திரைப்பட வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தத் துயரமான நேரத்தில் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து, ‘அஞ்சலி’ என்ற கதாபாத்திரமாக நான் வாழ்ந்த ஒவ்வொரு நாளும், என் மனதளவில் ஒரு சிறந்த மருந்தாக அமைந்து என்னை உற்சாகப்படுத்தியது. எனக்குள் மிகப்பெரிய நேர்மறை ஆற்றலையும் மகிழ்ச்சியையும் இப்படம் மீட்டெடுத்துக் கொடுத்தது.உண்மையில், நடிகர் அர்ஜுன் தாஸை நான் முதன்முதலில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் பார்த்தபோது, ஒரு சாதாரண ரசிகையாக அவருடன் ஆசைப்பட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
ஆனால், இன்று அவருடன் இணைந்து ஒரு முழு நீளத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அர்ஜுன் தாஸை இதுவரை மிரட்டலான குரலிலும், ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் மட்டுமே அனைவரும் ரசித்திருப்பீர்கள். ஆனால், இந்த ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தில் அவரை ஒரு அழகான ‘லவர் பாய்’ (Lover Boy) தோற்றத்தில் ரசிகர்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள்.அதேபோல், இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இப்படத்தில் இந்திராவாக நடித்துள்ள சோனா மிகவும் அற்புதமான திறமையான நடிகை. அவருடன் நடித்த காட்சிகளை நான் மிகவும் ரசித்தேன். இத்திரைப்படம் ஒரு அழகான, எதார்த்தமான வாழ்வியல் டிராமா; உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.”
இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசுகையில்:
“இந்த ஒரு நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். நம் வாழ்வில் அழுவதற்கு ஒரு காலம் வந்தால், அதைக் கடந்து நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஒரு காலம் கண்டிப்பாக வரும். அந்த வகையில் எனக்குக் கிடைத்துள்ள மிக உன்னதமான மகிழ்ச்சியான காலம் இதுதான். இந்தத் திரைப்படத்தை இந்திய சினிமாவில் காதலின் அடையாளமாகத் திகழும் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு நான் முழுமையாகச் சமர்ப்பிக்கிறேன். திரையில் அவருடைய அசாத்தியமான திரைப்படங்களைப் பார்த்துத்தான், நானும் ஒரு இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய ஒரு பிரத்யேக ‘லவ் லெட்டர்’ தான் இந்த ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம்.இப்படத்தை ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ் மட்டும்தான். ‘ரகு’ கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் திரைக்கதையை எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் அற்புதமாக இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர், சோனா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படப்பிடிப்பில் பல எதார்த்தமான சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக உழைத்துள்ளனர்” என்றார்.

பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களைக் கவர்ந்த மலையாளப் பிரபலம் ஹேஷாம் அப்துல் வஹாப் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அவர் விழாவில் பேசுகையில்:”மலையாளத்தில் உலகளாவிய ஹிட் அடித்த ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் ரசித்து, மகிழ்ந்து பணியாற்றிய திரைப்படம் இந்த ‘ஒன்ஸ்மோர்’ தான். தமிழில் எனது முதல் படமாக இது அமைந்திருந்தாலும், இப்படத்தின் இசை ஆல்பம் முழுவதிலும் ஒட்டுமொத்தக் குழுவினருடன் மிகுந்த கொண்டாட்ட மனநிலையுடன் இணைந்து உழைத்தோம். எல்லா தரப்பு மக்களும் தங்களது நிஜ வாழ்க்கையுடன் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அழகான எதார்த்தக் கதையை இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். பாடல்களை மிகவும் நயமாக எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இந்தப் பாடல்கள் அனைத்தும் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு எவர்கிரீன் ஆல்பமாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சமகால இளைஞர்களின் காதல், உணர்வுப் போராட்டங்கள் மற்றும் வணிக ரீதியிலான பொழுதுபோக்கு அம்சங்களை மையமாகக் கொண்டு இந்தத் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவுப் பணிகளையும், ராஜ்கமல் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டு உழைப்பில் உருவான இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.