வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம் எஸ் பாஸ்கர், நரேன், பவா செல்லத்துரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம் மதிமாறன். GS Cinemas International தயாரித்துள்ள இந்தப்படத்தினை, மந்த்ர வீரபாண்டியன் இயக்கியிருக்கிறார்.
பெண்கள் மாயமாவதும், கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்களும், சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்ட அக்கா இவானவைத் தேடி, அவரது தம்பி வெங்கட் செங்குட்டுவன் சென்னை வருகிறார். அப்போது அக்காவின் வீட்டருகில் இருக்கும் ஒரு பெண் மாயமானது குறித்து, தனது கல்லூரித் தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆராத்யாவோடு கண்டுபிடிக்க களமிறங்குகிறார். குற்றவாளியை கண்டுபிடித்தாரா, இல்லையா? இந்த மர்மக் கொலைகளின் பின்னணி என்ன? என்பது தான் மதிமாறன் படத்தின் கதை.
கதாபாத்திரத்திற்கு ஏற்றத் தோற்றம் வெங்கட் செங்குட்டுவனுக்கு இயற்கையாகவே இருப்பதால் இயல்பாக இருக்கிறது. இதனால் பார்வையாளர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார். அவருக்கு, இது முதல் படம் போல் அல்லாமல் சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார். கண் முன்னே தாய் தந்தை இறக்கும் போது, அவர் துடித்து அழுவது பார்வையாளர்களை பரிதவிக்க வைத்துவிடுகிறது.
‘லவ் டுடே’ இவானா, சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் உணர்ந்து, பள்ளி மாணவியாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் இருவேறு மாறுபட்ட நடிப்பினை கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார்.
வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரித் தோழி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆராத்யா, கவனிக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
வெங்கட் செங்குட்டுவனின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் இயல்பாக நடித்திருக்கிறார்.
கமிஷனராக ‘ஆடுகளம்’ நரேன், கவனம் ஈர்க்கிறார்.
பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், உள்ளிட்டோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
பர்வேஸின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்தின் பலமாக இருக்கிறார்கள்.
எழுதி, இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன் உயரக்குறைபாடு உள்ள மனிதர்களின் வலியினை பேசியிருப்பது பாராட்டுக்குரியது. இது குறித்த வசனங்கள் கைதட்டல்களை பெறுகிறது.
மொத்தத்தில், வழக்கமான க்ரைம் கதையாக இருந்தாலும், உயரக்குறைபாடு உள்ள ஒரு மனிதன் புலன் விசாரணை செய்வது புதிதாக இருக்கிறது.
க்ரைம் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்.