சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, ‘பருத்தி வீரன்’ வெங்கடேஷ், விஜி, ‘சுப்ரமனியபுரம்’ விசித்திரன், முருகேசன், ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், வட்டார வழக்கு. கண்ணுசாமி ராமசந்திரன் தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தோடநேரி கிராமத்தில் இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருடங்களாக பகை நிலவி வருகிறது. இந்த பகை கொலை செய்யும் நிலைக்கு செல்கிறது. இதனால் கொலைக்கு பழி வாங்கும் முயற்சியில் இன்னொரு குடும்பத்தினர் இருக்கின்றனர். இந்த இரு குடும்பங்களிடையே நிலவும் சம்பவங்களை தொகுத்து சொல்லப்பட்டது தான், வட்டார வழக்கு.
வட்டார வழக்கு படத்தில் நடித்த நடிகர் நடிகைகளில் முதலிடம் பிடிப்பவர் ரவீனா ரவி தான். ‘தொட்டிச்சி’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் அவருடைய இயல்பான நடிப்பு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜனும் இயல்பாகவே நடித்திருக்கிறார். ரவீனா ரவியுடனான காதல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.
இவர்களைத் தவிர, மற்ற கதாபாத்திரங்களில் ‘தோடநேரி’ கிராமத்து மக்களே நடித்துள்ளனர். அது இயல்பாக இருக்கிறது. அதுவே படத்தின் பெரும் பலமாகவும் இருக்கிறது. குறிப்பாக வட்டார பாஷை வெகு சிறப்பு. வசனங்கள் கதை களத்திற்கேற்றபடி அமைந்திருக்கிறது. அந்த ஊர் மக்களே வசனங்களை பேசுவதால், அந்த ஊருக்குள் சென்று வந்த உணர்வினைத் தருகிறது.
இளையராஜாவின் இசையில், 1980 களில் ஒலித்த சூப்பர் ஹிட் பாடல்களை காட்சிகளுக்கேற்றபடி பயன்படுத்தியிருப்பது சிறப்பு! அது காட்சிகளுக்கு வலிமை சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் மணியன், டோனி சான் ஆகியோரின் ஒளிப்பதிவு படதிற்கான பலம். கிராமத்தின் அழகினை அப்படியே படம்பிடித்துள்ளனர்.
மொத்தத்தில், இந்த ‘வட்டார வழக்கு’ பட்ஜெட் வரைமுறைக்குள் சிக்கிய, ஒரு எதார்த்த சினிமா!