மை டியர் பூதம் – விமர்சனம்!

பூத உலகினை ஆட்சி செய்துவரும் கற்கிமுகி (பிரபு தேவா) என்ற பூதம் ( இது நக்கீரரை பிடித்த பெண் பூதம் அல்ல ) குழந்தை வரம் வேண்டி முருகனை நோக்கி தவம் செய்கிறது. அதன் பயனாக கிங்கினி (அஷ்வந்த்) என்ற பூதம் பிறக்கிறது. இருவரும் சந்தோஷமாக விளையாடி வருகின்றனர்.

ஒரு நாள் இவர்கள் விளையாடும் போது ஒரு முனிவரின் தவம் கலைகிறது.. இதனால் கோபமடையும் அவர் ஒரு சாபத்தினை கொடுக்கிறார். அதாவது கற்கிமுகி (பிரபு தேவா) பூமியில் பொம்மையாக அவதரித்து அந்த பொம்மையை எடுப்பவர் அதில் எழுதபட்டிருக்கும் மந்திரத்தை படிக்க வேண்டும். இது நிகழ்ந்தால் பூத உலகிற்கு திரும்பலாம். மந்திரத்தை சரியாக உச்சரிக்காமல் போனால் பூதம் காற்றில் கலந்து விடும்.. இது தான் அந்த சாபம். இந்த பொம்மை திக்கு வாய் சிறுவன் அஷ்வந்த் கையில் கிடைக்கிறது. அவனால் பிரபுதேவா விமோச்சனம் பெற்றாரா இல்லையா? என்பது தான் மை டியர் பூதம் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

கதாபாத்திரத்துக்கு ஏற்ற படி மொட்டையடித்துக் கொண்டு பூதமாக நடித்திருக்கும் பிரபு தேவாவின் கெட்டப்பும்,  நடிப்பும் சூப்பர். குழந்தைகளின் மனதினை கொள்ளை கொள்கிறார். சிறுவர்களின் மேனாரிசத்தை வெளிப்படுத்தி சிறுவன் அஷ்வந்துடன் படம் முழுவதும் கலக்குகிறார். க்ளைமாக்ஸில் கண் கசிய செய்கிறார்.

திருநாவுக்கரசு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும்  சிறுவன் அஷ்வந்த், நடிப்பு அபாரம். சக சிறுவர்கள் கேலி செய்யும் போதும், க்ளைமாக்ஸில் பூத்த்திடம் கெஞ்சும் போதும் பர்தாபத்தை ஏற்படுத்துகிறான். அவனுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் தேவையான நடிப்பிஅனி கொடுத்துள்ளார். குறை சொல்ல முடியாத நடிப்பு.

குறைவான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் அதில் குறை இல்லாமல் நடித்திருக்கிறார்.

டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஒகே. பிரபு தேவா ஆடும் ஒரு பாடல் காட்சியை திரும்பத் திரும்ப ரசிக்கலாம். இந்தப்பாடலை நடனப்பிரியர்கள் கொண்டாடுவர்.

செந்தில் குமாரின் ஒளிப்பதிவு கலர் புல்…

கதை எழுதி இயக்கியிருக்கும் என்.ராகவன், குழந்தைகளுக்கான  இந்தப்படத்தினை அவர்களது இடத்திலிருந்தே இயக்கியிருக்கிறார். மேலும் பெரியவர்களுக்கான ஒரு அறிவுரையயும் வழங்கியிருப்பது சிறப்பு.

பூதம் என்று சொன்னவுடனே மாயாஜாலக் காட்சிகள் தான் கண்முன் வரும். அது இந்தப்படத்தில் இல்லை என்பது சிறிய ஏமாற்றம் தான்.

இருந்தாலும் சிறுவர், சிறுமியருடன் சென்று பார்க்க வேண்டிய படம் தான் இந்த ‘மை டியர் பூதம்’