பல வருடங்களுக்கு பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் கூட்டனியில் உருவாகியிருக்கும் படம் நானே வருவேன். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியாகியிருக்கிறது. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்தது. அதை பூர்த்தி செய்திருக்கிறதா? பார்க்கலாம்.
கதிர், பிரபு என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், தனுஷ். இதில் பிரபு (தனுஷ்) மனைவி இந்துஜா ரவிச்சந்திரன் , தன்னுடைய ஒரே மகள் சிறுமி ஹியா தவே, இவர்களுடன் ஒரு அமைதியான அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தனது மகளின் மீது அதீத பாசம் வைத்திருக்கும் தனுஷ், அவருக்காக என்னவேண்டுமானாலும் செய்யத் துணிபவர்.
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்பத்தில் மகளின் மூலமாக ஒரு பெரிய பிரச்சனை உருவாகிறது. அதாவது இரவு நேரங்களில் தானாகவே பேசியும், அழுதும் வருகிறார் ஹியா தவே. மகளின் மீது உயிரையே வைத்திருக்கும் தனுஷுக்கு அது பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஹியா தவே செல்கிறார். இதை சரி செய்யும் பொருட்டு, தனுஷ் டாக்டர் பிரபுவிடம் அழைத்து செல்கிறார். அவர், மகளை பரிசோதித்து விட்டு ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை சொல்கிறார். என்ன அது? என்பதும் அதன் பிறகு நடக்கும் விஷயங்களும் தான் ‘நானே வருவேன்’ படத்தின் கதை.
படம் துவங்கிய சில காட்சிகளுக்கு அடுத்து செல்வராகவன் தோன்றும் காட்சி குலை நடுங்கும் காட்சி. மிரட்டிவிட்டு போகிறார், செல்வராகவன். இரட்டையர்களாக தோன்றும் தனுஷ் இருவேறுபட்ட நடிப்பினை கொடுத்து அசரடிக்கிறார். இரட்டை வேடம் அவருக்கு புதிதில்லை என்றாலும், இரண்டு கதாபாத்திரங்களையும் ரசிக்க முடிகிறது. அவரது ரசிகர்களுக்கு இது ஒரு ட்ரீட்! கதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் கண்களை மேலே பார்த்தபடி முறைப்பது மிரட்டல்!
பிரபுவின் (தனுஷ்) மனைவியாக நடித்திருக்கும் இந்துஜா ரவிச்சந்திரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் படத்தில் தனுஷின் மகளாக முக்கியகதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹியா தவே சூப்பரான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதிரின் (தனுஷ்) மனைவியாக நடித்துள்ள எல்லி அவ்ரம் நடிப்பு, நம்மை பெரிதாக ஈர்க்கவில்லை! கதிரின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் நன்றாக நடித்திருக்கிறான். அவன், க்ளைமாக்ஸில் பிரபுவிடம் (தனுஷ்) பேசும் வசனம் சிரிப்பினையும் திகிலையும் ஏற்படுத்துகிறது.
நடிகர்கள் பிரபு , யோகிபாபு ஆகியோருக்கு ஒருசில காட்சிகள் தான் இருக்கிறது. இருவருமே கொடுத்த வேலையினை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்த சிலகாட்சிகளிலேயே திகிலுடன் கூடிய சுவாரஷ்யம் தொற்றிக் கொள்கிறது . அடுத்து என்ன? யார் ஹியா தவேவை கட்டுப்படுத்துகிறார்கள், என சஸ்பென்ஸாக கிரிப்பாக இடைவேளை வரை போகிறது.
செம்மையான இன்டர்வல்லுக்கு பிறகு தொடங்கும் இரண்டாம் பாதியில் சுவாரஷ்யம் கொஞ்சம் குறைகிறது. ஆனால், க்ளைமாக்ஸ் வரை போரடிக்கவில்லை!
எதனால் கதிருக்கு அப்படி மனநிலை மாறுகிறது? அதற்கான காரணம் என்ன? என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை! இதனால் சுவாரஷ்யம் மிஸ்ஸிங்!
படம் முழுவதும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, அட்டகாசம். முதல் பாதி செம்ம…
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு மிரட்டல்! அடர்ந்த காடுகளின் நடுவே ஒவ்வொரு காட்சியும் கண்களை விரியசெய்து, ரசிக்க வைக்கிறது!
நானே வருவேன் – ரசிக்கக்கூடிய பாராநார்மல், சைக்கோ த்ரில்லர்!