‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ :  விமர்சனம்.

‘ரெயின்போ புரொடக்சன்ஸ்’ சார்பில் வரதராஜ் தயாரித்து,  இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ .  இந்தப் படத்தில் சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பெண்களை ஆபாசமாக ரகசியமாக படம்பிடித்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கும்பலின் வலையில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை எச்சரிக்கும் படமே ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘.  தணிக்கை கெடுபிடிகளுக்காகத்தான் பெண் ‘பென் ‘ஆக மாறியுள்ளது.

ப்ளே பாயாக சுற்றி திரிபவர் அரவிந்த் . சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களை  காதலிப்பது போல் நடித்து அவர்களின்  அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே காசு பார்ப்பான். இதுவே முழு நேரத்தொழில். பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் இருக்கின்றனர். அவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்நிலையில்  அரவிந்தை  காதலிக்கும் நந்தினிக்கு அவனைப் பற்றி விஷயம் தெரிய வருகிறது. அது குறித்து அவள் கேட்கிறாள். அப்போது அவன் அவளை உண்மையிலேயே காதலிப்பதாகவும்,  சேர்ந்து வாழ விரும்புவதாகவும் சொல்கிறான்.  இதனால் அவர்களுக்குள் மோதல்  நடக்கிறது . இருவரும் சேர்ந்தனரா, பிரிந்தனரா  என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சின்னத்திரை நடிகரான ராஜ்கமல் தான் படத்தின் கதாநாயகன். பெண்களிடம் காதல் வசனம் பேசும் காட்சிகளிலும், பெண்களை மிரட்டும் காட்சிகளிலும் இருவேறுபட்ட நடிப்பினில் மனம் கவர்கிறார். நாயகியாக நடித்த ஸ்வேதா பண்டிட் துரோகம் அறிந்து   குமுறும் போது நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆபாசப்படம் எடுக்கும்  கும்பலில்  உள்ளவனாக வரும் ஆப்பிரிக்க நடிகரும் நன்றாகவே வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

வை- பை மூலம் செல்போன்களின் தகவல்கள் திருடப்படுவதைக் காட்டி , தொழில்நுட்ப வசதிகள் எந்தளவுக்கு  ஆபத்தானது.  குறிப்பாகப் பெண்களுக்கு எவ்வளவு ஆபத்தானது  என்று எச்சரித்து இருக்கிறது படம்.

சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும், விவேக் சக்ரவர்த்தியின் இசையும், ஓகே! செல்போன் மூலம் பெண்கள் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது. என்பதை கிடைத்த பட்ஜெட்டில் சொல்லி இருக்கிறார்  இயக்குநர் வரதராஜ்.

இந்தப்படம் பெண்கள்  விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்லியிருப்பதற்காக, குறைகள் பல இருந்தாலும் இயக்குநரைப் பாராட்டலாம்.