பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜேஜிஎம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
தெலுங்கு திரை உலகின் பாதையை திசை திருப்பிய படைப்பாளிகளில் முக்கியமானவரான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘ஜேஜிஎம்’. பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்திய அளவிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் ‘ஜேஜிஎம்’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆக்சன் டிராமா ஜானரில் தயாராகிறது.
இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கனவுப் படைப்பான ‘ஜேஜிஎம்’ திரைப்படத்தை அவருடைய சொந்த பட நிறுவனமான பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். தயாரிப்பில் சார்மி கவுர், வம்சி பைடிபள்ளி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் முதன் முறையாக நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்ட அட்டவணையுடன் தொடங்குகிறது. இதில் நடிகை பூஜா ஹெக்டே அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கனவுப் படைப்பான ‘ஜேஜிஎம்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி பல சர்வதேச நாடுகளில் தொடர்கிறது. இதற்காக தயாரிப்பாளர்கள் பிரத்யேக காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
இயக்குநர் பூரி ஜெகன்நாத் , நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை திரையில் கண்டிராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார். அதே தருணத்தில் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திரையுலக பயணத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ‘ஜேஜிஎம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.
பூரி ஜெகன்நாத் எழுதி, இயக்கி வரும் ‘ஜேஜிஎம்’ திரைப்படம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.