விக்ரம் – விமர்சனம்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கமல்ஹாசனின் நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ்  இன்டர்நேஷனல்’ தயாரித்து உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் வெளிகாகியுள்ள படம், விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன் ,சூரியா, விஜயசேதுபதி ,பகத் பாசில், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்க கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார், லோகேஷ் கனகராஜ்.

கதையை பொருத்தவரை எல்லோருக்கும் நன்கு பரிச்சயமான கதை தான். ஆனால் திரைக்கதை சொல்லப்பட்ட விதத்தில் விறுவிறுப்பும், அடுத்தடுத்த சர்ப்ரைஸ் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றது. படம் துவங்கிய உடனே கதைக்குள் சென்று விடுவது கூடுதல் சிறப்பு!

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் மூவருக்குமான காட்சிகள் சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் முதல் பாதியில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைவு. அது 4 வருடங்கள் கழித்து திரையில் காணவந்த அவரது ரசிகர்களுக்கு பெரும் குறை! ஆனால் திரையில் வரும் காட்சிகளிலெல்லாம் மரண மாஸ் காட்டுகிறார். அவர் கண் கலங்கும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களின் கண்களும் கசியும்! க்ளைமாக்ஸ் ஃபைட்டில் வெறித்தனம்..! ஆக்‌ஷன், எமேஷன் இரண்டிலும் தூள் கிளப்பியிருக்கிறார்.

டைட்டில் பாடலாக வரும் ‘பத்தல பத்தல’ பாடல் கமல் ரசிகர்களுக்கான ட்ரீட்டோ.. ட்ரீட்! அதேபோல் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு செம்ம சூப்பரான இண்டர்வல் பிளாக்! ஆனால் இவைகளுக்கு ஸ்பீட் பிரேக்கராக ஃபஹத் ஃபாசிலுக்கும் காயத்ரி ஷங்கருக்குமான  காதல் காட்சிகள் இடம் பெறுகிறது.

கமல்ஹாசனுக்கு சரியான டஃப் கொடுத்து இருக்கிறார் விஜய்சேதுபதி. இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகளில் ரசிகர்களின் மயிர்க்கூச்செரியும்! விஜய்சேதுபதி தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் இரக்கமற்ற ஒரு கொடூரனை கண் முன் நிறுத்தியிருக்கிறார். ஃபகத் ஃபாசில் கைதேர்ந்த நடிப்பும் ரசிக்க வைக்கிறது. சர்வ சாதரணமாக நடித்து இருக்கிறார்.

அன்பறிவின் சண்டைக்காட்சிகள் தரமாக இருக்கிறது. ஆக்சன் பிரியர்களுக்கான தீபாவளி தான் இந்தப்படம். அங்கங்கே துப்பாக்கிகளின் சத்தம். ஆக்‌ஷன் காட்சிகளை சிந்தாமல் சிதறாமல் படம் பார்ப்பவர்களின் கண்களினூடே கடத்தியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் கிருஷ் கங்காதரன். காட்சிகளுக்கேற்ற ஜாலத்தை செய்கிறது அனிருத்தின் பின்னணி இசை.  சவுண்ட் எஃபெக்ட்ஸ் சூப்பர் துப்பாக்கிகளை லோட் செய்து லாக் செய்யும் காட்சிகள் அல்டிமேட்! ஆனால் விஷூவல் எஃபெக்ட்ஸ் அப்படியில்லை! பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் குறைவில்லை. ஆனால் படத்தின் நீளத்தை குறைக்க வாய்ப்பிருந்தும் விட்டுள்ளார்?

விக்ரம் படம் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆக்ஷன் பிரியர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.