சிவராஜ்குமார் நடித்து, கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘டகரு’. இப்படத்தின் ரீமேக் தான், ரெய்டு. இதில், விக்ரம் பிரபு, ஶ்ரீ திவ்யா, அனந்திகா, செல்வா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் முத்தையா வசனம் எழுத இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குனர் கார்த்தி.
கன்னடத்தில் பெற்ற அதே வெற்றியை ரெய்டு பெறுமா பார்க்கலாம்.
பல்வேறு சினிமாக்களில் பார்த்த, அதே பழிவாங்கும் கதை தான். அதை, நான் லீனியர் முறையில் சொல்லி பிரமிக்க வைத்திருக்கிறார்கள். இதுவே கன்னடத்தில் பிரமாண்ட வெற்றி பெற ஒரு காரணமாகவும் அமைந்தது.
கதைக்கு வருவோம், ஆதரவற்ற இன்ஸ்பெக்டர் விக்ரம் பிரபுவுக்கும், ஶ்ரீதிவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட உள்ள நிலையில், ஶ்ரீதிவ்யா ரௌடிகளால் கொல்லப்படுகிறார். இதனால், அந்த ரௌடிகளின் மொத்தக் கூட்டத்தினையும், விக்ரம் பிரபு கொன்று குவிப்பதே, ரெய்டு படத்தின் கதை.
விக்ரம் பிரபுவை பொருத்தவரை, அவரால் இந்தக் கதைக்கு, என்ன செய்ய முடியுமோ, அதை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த ஶ்ரீதிவ்யாவை, மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள் ஆனால், அவரால் படத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. மற்றொரு நாயகி அனந்திகா, அவராலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
வில்லனாக ரிஷி ரித்விக். சாரயம் குடிப்பது, புகை பிடிப்பது கண்களை உருட்டுவது மட்டுமே வில்லத்தனம் என்று நினைத்திருக்கிறார். சௌந்தர்ராஜன், டானியல், வேலு பிரபாகரன் ஆகியோரும் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களில் டானியல் கவனம் ஈர்க்கிறார்.
ஒளிப்பதிவு பரவாயில்லை! டகரு படத்தில் பார்த்த அதே கோணங்களில் படமாக்கியிருக்கிறார்கள். சாம் சி எஸ், இசையமைத்திருக்கிறார். அவ்வப்போது வந்து காதுகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்துகிறார்.
மொத்தத்தில், ஐ டி ரெய்டுக்கு பயந்து ஓடும் பணக்காரர்களைப் போல், ரசிகர்கள் பாதிப்படத்தில் தெறித்து ஓடுகிறார்கள்!?