Rajakili Movie Review :
Cast : Thambi Ramaiya, Samuthirakani, Deepa, Praveen Kumar G, Daniel Annie Pope, Pazha Karupaiya, Vetrikumaran, Arul Doss, Suveta Shrimpton, Reshma Pasupaleti, Subha , VJ Andrews, Malik , King Kong & Others
Production : V House Productions – Suresh Kamatchi
Direction : Umapathy Ramaiah
DOP : Kedarnath – Gopinath
BGM: Sai Dinesh
ராஜாகிளி – விமர்சனம்!
‘அன்னை மடி’ என்ற பெயரில், சமுத்திரக்கனி, ஆதரவற்றோருக்கும், மனநலம் பாதிக்கப்பட்டோருக்குமான இல்லத்தை நடத்தி வருகிறார். ஒரு நாள், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், ரோட்டோரக் குப்பையிலிருக்கும் தம்பி ராமையாவை மீட்டு தனது இல்லத்தில் அடைக்கலம் தந்து பராமரிக்கிறார். அப்போது தம்பி ராமையாவிடமிருக்கும் துணி மூட்டையிலிருக்கும் ஒரு டைரியை எடுத்து படிக்கும் சமுத்திரக்கனிக்கு தம்பி ராமையா பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வரும் கோடீஸ்வரர் என தெரிய வருகிறது. தொடர்ந்து படிக்கும்போது பல சம்பவங்கள் அவரை அதிர்ச்சியடைச்செய்கிறது. அது என்ன? தம்பி ராமையாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன என்பது தான், ‘ராஜா கிளி’.
தம்பி ராமையா கோடீஸ்வராகவும், மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் இருவேறு தோற்றங்களில் நடித்திருக்கிறார். இதில், மனநலம் பாதிக்கப்பட கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம், ரசிகர்கர்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் தொழிலதிபர் முருகப்பன் கதாபாத்திரத்தில் பல இடங்களில் எரிச்சலூட்டுகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் மகனால் துரத்திவிடப்படும் காட்சியில், படம் பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்துவிடுகிறார்.
சமுத்திரக்கனிக்கு, வழக்கமான உபதேசம் செய்யும் கதாபாத்திரம். அதை சரியாக செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் வசனங்கள் கை தட்ட வைக்கின்றன.
தம்பி ராமையாவின் மனைவியாக நடித்திருக்கும் தீபா, சந்தேகம் கொள்ளும் பெண்களை பிரதிபலிக்கிறார். தன்னையும் தொலைத்து, மற்றவர்களையும் தொலைத்து விட்டு நிற்கும் கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். இக்கட்டான சூழலில், அவருக்கு உறவுகள் சொல்லும் புத்திமதி நிதர்சனம்.
தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் சுபா, இளம் காதலியாக நடித்திருக்கும் சுவேதா ஷ்ரிம்ப்டன் ஆகியோர் அவர்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்துள்ளனர்.
மற்றபடி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், பழ. கருப்பையா, டேனியல் அனி போப் (அதீத நடிப்பு கடுப்பேற்றுகிறது.) , பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா, வெற்றிகுமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், , கிரிஷ், கிங் காங் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
தம்பி ராமையாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை!
சாய் தினேஷ் பின்னணி இசை சிறப்பு.
ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் – கோபிநாத் ஆகியோரது ஒளிப்பதிவில் குறைகளில்லை!
பிரபலமான ஒரு தொழிலதிபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தினை, நியாயப்படுத்துவது போல் சித்தரித்தது ஏமாற்றம் தந்தாலும், அதிலிருந்து மிகைப்படுத்தி, இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து பாடமாகவே இருக்கிறது.
கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கும் தம்பி ராமையா, கதாபாத்திரங்களை இன்னும் நேர்த்தியானதாக வடிவமைத்திருக்க வேண்டும். சில கதாபாத்திரங்கள், இரண்டு பக்கமும் பேசுகிறது. அதை தவிர்த்திருந்திருக்கலாம்.
மற்றபடி, சபலபுத்தி மனிதர்களின் அதள பாதாள வீழ்ச்சியினை, உணர்வுபூர்வமாக படமாக்கியிருக்கிறார், இயக்குநர் உமாபதி ராமையா.
‘ராஜா கிளி’ – சபல கிளியின் அவலக் கதை!