‘மேக்ஸ்’ –  விமர்சனம்!

Max Tamil Movie Review :

‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில், விஜய் கார்த்திகேயா இயக்கியிருக்கும் படம், ‘மேக்ஸ்’. இதில், கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், இளவரசு , ‘ஆடுகளம்’ நரேன், சுனில் , சரத் லோகிதாஸ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிச்சா சுதீப், குற்றவாளிகளிடத்தில் கடுமையாக நடந்து கொள்ளும், நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர். சஸ்பெண்ட் முடிந்து மீண்டும் பதவி ஏற்க வருகிறார். வரும் வழியில், இரவு நேர வாகன சோதனையின் போது, பெண் காவலர்களிடத்தில் இருவர் அத்து மீறி நடந்து கொள்கின்றனர். இதையடுத்து அவர்களை ஸ்டேஷன் லாக்கப்பில் வைக்கிறார். அந்த ஸ்டேஷனில் இருக்கும் மற்ற போலீசார் அந்த இருவரும் அமைச்சர்களின் மகன்கள் என்பதால் லக்கப்பில் வைக்க பயப்படுகின்றனர். போலீசாரை சமாதானப்படுத்திவிட்டு தானே காலையில் பதவியேற்றவுடன் ‘எப்.ஐ.ஆர்’ போடுவதாக சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுகிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு வேலை காரணமாக சென்றுவிட, தனியாக இருக்கும் ஹெட் கான்ஸ்டபிள் இளவரசுவும் சொந்த வேலை காரணமாக ஸ்டேஷனை பூட்டிவிட்டு சென்று விடுகிறார். எல்லோரும் ஸ்டேஷனுக்கு திரும்பி வருகின்றனர். அப்போது லாக்கப்பில் இருந்த அமைச்சரின் மகன்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கின்றனர். மொத்த ஸ்டேஷனும் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருக்கிறது. இதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான், ‘மேக்ஸ்’ படத்தின்  டிவிஸ்டுகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

படம் ஆரம்பித்த 15 நிமிடங்களிலிருந்து அடுத்தடுத்த காட்சிகள் வேகமெடுக்கிறது. யூகிக்க முடியாத காட்சிகளால், ரசிகர்கள் கவனம் திரையிலிருந்து விலகாமல் இருக்கிறது. இது, க்ளைமாக்ஸ் வரை தொடர்வது திரைக்கதையின் பலம். படம் செல்லும் வேகத்தில் லாஜிக்கை யோசிக்க முடியவில்லை!

கிச்சா சுதீப், ‘மேக்ஸ்’ கதாபாத்திரத்தில் மாஸ் காட்டியிருக்கிறார். சக காவலர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் போடும் திட்டம் சிறப்பு. கதாபாத்திரத்தினை உணர்ந்து கவனமுடன் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி! சந்தர்ப்பத்திற்கேற்றபடி முடிவெடுக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

வில்லன் சுனிலின் கைத்தடியாக, கிரைம் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பு சூப்பர் ஸ்மார்ட்! உளவு பார்க்க ஸ்டேஷனுக்குள் கெத்தாக நுழைந்து பார்வையினாலேயே மிரட்டியிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சுனில், லேடி கான்ஸ்டபிளர்களாக நடித்திருக்கும் சம்யுக்தா ஹார்னட், சுக்ருதா வாக்லே, அமைச்சராக நடித்திருக்கும் சரத் லோகிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, ‘ஆடுகளம்’ நரேன், ஹெட் கான்ஸ்டபிள் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் உக்ரம் மஞ்சு என அனைவரும் திரைக்கதைக்கு சுவாரசியம் கொடுத்துள்ளனர்.

பி.அஜனீஷ் லோக்நாத்  பின்னணி இசை, ஆக்‌ஷன் காட்சிகளுக்கான பலம். ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவின் ஒளிப்பதிவும் சிறப்பு சேர்த்துள்ளது.

படத்தொகுப்பாளர் எஸ்.ஆர்.கணேஷ் பாபு, பார்வையாளர்களை பதட்டத்துடனேயே வைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா, ஒரே இரவில் நடந்து முடியும் கதையை ஆக்‌ஷன், த்ரில்லர் பிரியர்களுக்காக உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்திற்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய படம், மேக்ஸ்!