‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனத்தின் சார்பில், கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம், ரெபெல். இதில் GV.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.நிகேஷ்.
ரெபெல் படத்தினை, ‘சக்தி ஃபிலிம் பேக்டரி’ நிறுவனம் சார்பில், B. சக்திவேலன் வெளியிட்டிருக்கிறார். இந்நிறுவனத்தின் சார்பில் அன்மையில் வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவோ, வியாபார ரீதியாகவோ வெற்றி பெறாதது, குறிப்பிடத்தக்கது. ரெபெல் எப்படியிருக்கிறது பார்க்கலாம்.
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, குறிப்பாக, கேரள – தமிழ்நாடு எல்லை பிரிவினையின் போது, தமிழ் நாட்டில் வசிக்கும் சில தமிழகப் பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன. அப்படி இணைக்கப்பட்ட ஒரு பகுதியான மூணாறில் வசிக்கும், தேயிலைத் தோட்டத் தமிழர்கள், கேரள கட்சிகளால் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்ட நிலையில், அங்கு வசித்து வரும் இளைஞன் கதிரேசன் (GV.பிரகாஷ் குமார்), அவர்களுக்கான உரிமையினை மீட்டெடுப்பது தான், ரெபெல் படத்தின் கதை.
1980-களில் நடந்த ஒரு உண்மை சம்பத்தைத் தழுவி இந்தக்கதை அமைக்கப்பட்டுளதாக, கூறியிருக்கிறார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கும் எஸ்.ஆர்.நிகேஷ்.
அதாவது, மூணாறு தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெற்றோர்களுக்கு, தங்களது பிள்ளைகள் கல்லூரியில் சேர்ந்து படிப்பது, பெரும் கனவாக பார்க்கப்படும். அதிலும் அருகே இருக்கும், பாலக்காடு சித்தூரின் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவர். இந்த சூழலில், கதிரேசன் (GV.பிரகாஷ் குமார்), செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்) இருவரும் அந்தக் கல்லூரிக்கு தங்கிப்படிக்க செல்கின்றனர்.
ரேக்கிங் என்ற பெயரில், தமிழ் மாணவர்களும், மாணவிகளும் மலையாள மாணவர்களால் கேவலப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு கல்லூரி நிர்வாகமும் துணை போகிறது. மேலும், பின்புலமாக 1980 களில் கேரளாவில் ஆட்சி செலுத்தி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது.
படிப்பை முடித்தால் போதும் என்ற மாணவர்கள், நடப்பதை சகித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், புதிதாக கல்லூரிக்கு வந்த GV.பிரகாஷ் குமார், கிளர்ந்தெழுகிறார், Rebel!? அதன் தொடர்ச்சியாக, கேரள ஆளுங்கட்சியின் செல்வாக்குப்பெற்ற கல்லூரியில் படித்து வரும் வி.பி. வெங்கிடேஷால், ஆதித்யா பாஸ்கர் கொடுமையான முறையில் தாக்கப்பட்டு மரணமடைகிறார். இதைக்கண்டு கடும் கோபம் கொள்ளும் GV.பிரகாஷ் குமார், ஆளுங்கட்சி, எதிர்கட்சி இரண்டையும் எதிர்த்து வெற்றி பெறுகிறார். இதுவே, ரெபெல் படத்தின் சுவாரசியமற்ற திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.நிகேஷ், கதை குறித்த போதிய புரிதலின்றி, குழப்பமான திரக்கதையில் சொல்ல வரும் சர்ச்சையான விஷயத்தினை சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார். சில இடங்களில் உரிமைக்கும் போராடுபவர்களையே களங்கப்படுத்தியிருக்கிறார்.
GV.பிரகாஷ் குமார், முதன் முதலில் கல்லூரிக்குள் செல்லும்போது ஒரு குழப்பமான முறையில் நடக்கும் விஷயங்களை கவனிக்கும் போதும், நெஞ்சை நிமிர்த்தியபடி வி.பி. வெங்கிடேஷை எதிர்த்து அடிக்கும் போதும், மமிதா பைஜூவுடனான நட்பின் போதும் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி, நடித்துள்ளார்.
மமிதா பைஜூவுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை. இருந்தும், தனது கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளார்.
GV.பிரகாஷின் நண்பர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
இவர்களைப் போலவே கல்லூரிப் பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ், GV.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா இருவரும் நடித்துள்ளனர்.
மலையாள மாணவர்கள் அமைப்பின் தலைவர்களாக நடித்திருப்பவர்களில், ஷாலு ரஹீமை விட, வெங்கிடேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார்.
GV.பிரகாஷின் இசையில் பாடல்கள் ஓகே! ஆனால், Ofro’வின் பின்னணி இசை பெரிதாக கவரவில்லை!
ரெபெல் – தேவையற்றது!