‘கொம்புவச்ச சிங்கம்டா’ : விமர்சனம்!

சிறு வயதிலிருந்தே சாதி, மத வேறுபாடுகளின்றி இருந்து வருபவர்கள் சசிகுமாரும் அவரது நண்பர்கள் கொண்ட 6 பேர் குழுவும். கீழ்சாதியினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், இவர்கள் அவற்றை முறியடிக்கின்றனர். இது ஊரில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. இந்தக்கரணத்தால் இவர்களது ஒற்றுமையை குலைக்க  சதி நடக்கிறது. அந்தச் சதியினால் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றனர். கொலை செய்யத்தூண்டும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? என்பது தான் படத்தின் கதை.

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ‘சாதி’  பாகுபாடு பார்க்காமல்  ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்ற கருத்தை படம் வலியுறுத்திகிறது.. மடோனா செபாஸ்டியன் உடனான காதல் காட்சிகளிலும், அடிதடி காட்சிகளிலும், சசிகுமார் தனது வழக்கமான நடிப்பின் மூலம் மனம் கவர்கிறார். அடுத்தடுத்து  நண்பர்கள் கொலை, அதை தொடர்ந்து எழும் பிரச்சனைகள், அதை சரி செய்ய சசிகுமார் எடுக்கும் நடவடிக்கைகள் என படம் விறுவிறுப்பாகவே நகர்கிறது.

இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெராடி, தயாரிப்பாளர்  இந்தர் குமார் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கேற்ற சரியான தேர்வு. இவர்கள் மூவரும் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என யூகிக்க முடியாதபடி இருக்கிறது. சிலர் யூகித்துவிடலாம்!

கதாநாயாகியாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன் பாடல் காட்சிகளில் மட்டுமே வலம் வருகிறார். மாண்டேஜ் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.

சூரியின் காமெடி காட்சிகள்  பரிதாபம்! சுத்தமாக எடுபடவில்லை இனியும் தனக்கான ஸ்க்ரிப்ட் ரைட்டரை வைத்துக்கொள்ளவில்லை என்றால், ரசிகர்கள் விரைவில் மறந்து விடுவார்கள்.

சமுத்திரக்கனி, ஸ்ரீ பிரியங்கா, சங்கிலி முருகன், அபி சரவணன், அருள்தாஸ், தீபா ராமானுஜம் ஆகியோருக்கு ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் சிறப்பாகவே வந்து போகிறார்கள்.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், மிகப்பெரிய வெற்றி பெற்ற தனது முதல் படமான ‘சுந்தர பாண்டியன்’ படத்திற்கு பிறகு சசிகுமாரை இயக்கியிருக்கிறார். எப்பேர்பட்ட நண்பர்களையும் சாதி அரசியல் காவு வாங்கிவிடும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் ‘கரு’ சமூகத்திற்கு தேவையான ஒன்றாகவும், வரவேற்க கூடியதாகவும் இருக்கிறது.

முதல் கொலை எப்படி, யாரால் நடத்தப்பட்டது என்பதில் தெளிவில்லாமல் இருப்பது போன்ற சில குறைகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால், ‘கொம்புவச்ச சிங்கம்டா’ஒரு நல்ல கமர்ஷியல் படம் .