தி வாரியர் – விமர்சனம்!

ஒட்டு மொத்த மதுரையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிகப்பெரிய ரௌடி ஆதி. அவரும் அவரது கும்பலும் ஒருவரை நடுரோட்டில் வெட்டிப்போட்டு விட்டுச் செல்கிறது. அந்த வழியாக வரும் மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் ராம் பொத்தினேனி அவரை காப்பாற்றுகிறார். இதனால் ரௌடி ஆதிக்கும் டாக்டர் ராம் பொத்தினேனிக்கும் மோதலாகி ஆதி அவரை அடித்து நொறுக்குகிறார். இதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை பார்த்து பார்த்து புளித்துப்போன திரைக்கதையில், அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டிய யூகிக்க கூடிய காட்சிகள் மூலம் சொல்லியிருக்கிறார், இயக்குனர் லிங்குசாமி.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் கதாநாயகனாக  வலம் வரும் ராம் பொத்தினேனிக்கு இந்தப்படம் எந்த விதத்திலும் கை கொடுக்காது. டாக்டர், போலீஸ் டி.எஸ்.பியாக இரு வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அது ரசிகர்களை எந்த விதத்திலும் கவரவில்லை. இருப்பினும் கீர்த்தி ஷெட்டியுடன் காதல்காட்சிகளில் சற்றே கவனம் பெறுகிறார்… இருவரும் ஆடும் புல்லட் சாங்க் ரசிக்க வைக்கிறது. அசரவைக்கும் அழகில் கீர்த்தி ஷெட்டி, அவர் அடிக்கும் விசிலால் இளைஞர்களின் தூக்கம் கெடுகிறது. டிக்கட் எடுத்த காசில் பெரும்பங்கினை கீர்த்தி ஷெட்டிக்கு கொடுக்கலாம்..

வில்லனாக நடித்திருக்கும் ஆதியின் நிலைமை அய்யோ பாவம். அவர் பில்டப்புக்கேற்ற காட்சிகள் இல்லை. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சோர்வையும், வெறுப்பையும் தருகிறது.

நதியா, அக்‌ஷரா கெளடா, ஜெயப்பிரகாஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் வந்து போகிறார்கள்.  இவர்கள் நடித்திருக்கும் காட்சிகள் படத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும், சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் சற்றே ஆறுதல் கொடுக்கிறது.

‘தி வாரியர்’பொறுப்பில்லாமல் எடுக்கப்பட்ட ஒரு படம்

Leave A Reply

Your email address will not be published.