‘எண்ணித்துணிக’ – விமர்சனம்!

ஜெய்யும், அதுல்யா ரவியும் தங்களது காதல் கல்யாணத்திற்காக நகை வாங்குவதற்கு நகைக்கடைக்கு வருகின்றனர். அப்போது அந்தக்கடையில் கொள்ளை நடக்கிறது. அதில் அமைச்சர் சுனில் ரெட்டிக்கு சொந்தமான வைரங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. மேலும், அதுல்யா ரவி கொல்லப்படுகிறார். காதலி கொலைக்கு பழிதீர்க்க ஜெய்யும், வைரங்களை தேடி சுனில்ரெட்டியும் கொள்ளையர்களை தேடிச்செல்கின்றனர். முடிவு என்ன என்பது தான் ‘எண்ணித்துணிக’ படத்தின் கதை. தொடர் தோல்வி படங்களை கொடுத்துவரும் ஜெய்க்கு இந்தப்படமாவது கை கொடுக்குமா?

அநேக படங்களில் பார்த்த சலிப்பூட்டும் காட்சிகளால் ரசிக்கமுடியவில்லை. ஜெய் தனது வழக்கமான முகபாவனைகளில் வந்து போகிறார். குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. ஆக்‌ஷன் காட்சிகள் வலிய திணிக்கப்பட்டுள்ளது. காதல், ஆக்‌ஷன் என இரண்டிலும் ஜெய் ஏனோ தானோ நடிப்பு!? ‘என்னடியே என்னடியே’ என்ற ஒரு டூயட் பாடல் கேட்பதை விட பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

ஜெய்யின் காதலியாக நடித்துள்ள அதுல்யா ரவி, தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் அவருக்கு பொருந்தவில்லை.

அமைச்சராக நடித்திருக்கும் சுனில் ரெட்டி, ஆரம்பம் முதல் படம் முடியும் வரை ரசிக்க வைக்கிறார். வம்சி கிருஷ்ணா வழக்கம் போல் அய்யோ பாவம் வில்லன்.

சர்வதேச மாஃபியா கும்பல், லோக்கல் ரௌடி கும்பல் இரண்டிற்கும் நம்பத்தகுந்த காட்சியமைப்புகள் இல்லை. ஒரு சில டிவிஸ்டுகளை கொடுத்து ஆச்சர்யப்படுத்தி, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.கே.வெற்றிச் செல்வன், கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பெரும்பாலான காட்சிகள் முன்னரே தெரிந்து விடுவதால் சலிப்பு ஏற்படுகிறது.

மொத்தத்தில் ஜெய்யின் நடிப்பினில் வெளியாகியிருக்கும் இன்னொரு தோல்விப்படம்!