இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி எழுதி, இயக்கி மிகப்பெரும் எதிர்பார்ப்பினில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR). ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கான், ஆலியாபட், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இன்று வெளியான இப்படத்திற்கு ஆந்திராவில் உள்ள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மொழிமாற்றம் செய்து வெளியாகி இருக்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா? பார்க்கலாம்.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் அதாவது 1920 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவில் கதை நடக்கிறது. நுணுக்கமான வேலைப்பாட்டுடன் கையில் டாட்டூ வரையும் திறமை பெற்ற பழங்குடி சிறுமியினை, அடிமையாக்கி இழுத்து செல்கிறது காட்டுக்குள் வேட்டைக்கு வந்த, கவர்னரின் குடும்பம். அந்த பழங்குடியினரின் பாதுகாவலன் ஜூனியர் என்.டி.ஆர் அந்த சிறுமியை மீட்க கோட்டைக்குள் செல்கிறார்.
இந்த செய்தியினை ஒற்றர்கள் மூலமாக தெரிந்து கொள்ளும் பிரிடிஷ்காரர்கள், ஜூனியர் என்.டி.ஆர் – ரை பிடிக்கும் பொறுப்பு, போலீஸ் அதிகாரியான ராம்சரணக்கு அவரின் விருப்பத்தின் பேரில் கொடுக்கப்படுகிறது. இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
இரண்டு பெரிய ஹீரோக்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது அறிமுக காட்சிகளே அபாரம். ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து அடித்து இருக்கிறார்கள். முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை பிரமாண்டம். படம் பார்க்கும் அனைவரும் பிரமிப்பில் இருந்து வெளிவர சற்று அவகாசம் ஆகும். இருவருடைய உடல்வாகுவும் ஆக்ஷன் காட்சிகளுக்கேற்றவாறு அமைந்திருக்கிறது. காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இவர்களைப்போலவே சமுத்திரகனி, அஜய் தேவ்கான், ஆல்வியா மோரிஷ், அலியா பட் ஆகியோரும் சிறப்பாகவே தங்களது பங்கினை அளித்து இருக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்களாக நடித்தவர்களும் படத்திற்கு பெரும் பங்கு அளித்துள்ளனர்.
இயக்குனர் ராஜமௌலியின் கற்பனைக்கு உயிர்கொடுத்தவர்கள் என சாபுசிரிலின் ஆர்ட் ஒர்க்கையும், கே.கே.செந்திலின் ஒளிப்பதிவினையும், மரகதமணியின் இசையையும் சொல்லலாம். இதற்கு முதுகு எலும்பாக கிராபிக்ஸ் டீமினை சொல்லலாம். இவர்களுடன் சேர்ந்து இதில் பணியாற்றிய அனைவரும் ஒரு விஷுவல் மேஜிக்கினை காட்டியுள்ளனர். இத்தகைய மேஜிக்கினால் பல லாஜிக்குகள் மறக்கடிக்கப்பட்டு விடுகின்றன.
ஒரு சாதரண கதையினை வாய்பிளந்து மீண்டும் பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் ராஜாமௌலி.