‘சபரி’ – விமர்சனம்!

வரலட்சுமி சரத்குமார், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் கணேஷ் வெங்கட்ராமன், மைம் கோபி, சஷாங்க் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி, இயக்கியிருக்கிறார் அனில் கார்ட்ஸ். கோபி சுந்தர் இசையமைத்திருக்க, ராகுல் ஸ்ரீவத்சவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், வரலட்சுமி சரத்குமாரும் கணேஷ் வெங்கட்ராமனும். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. ஒரு நாள் வரலட்சுமி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமனின் ஆபிசுக்கு செல்கிறார். அங்கே கணேஷ் வெங்கட் ராமனும் அவரது பெண்முதலாளியும் மிக நெருக்கமாக இருக்கிறார்கள். இதைப் பார்த்து அதிர்ந்து போகும் வரலட்சுமி சரத்குமார், கோபம் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறார். கார்ப்பரேட் கல்ச்சரில் இதெல்லாம் சகஜம் என சொல்லி, அவரை சமாதானப்படுத்துகிறார். எதையும் பொருட்படுத்தாமல்,  வரலட்சுமி சரத்குமார் வெளியேறிடுகிறார் .

இதையடுத்து, கணேஷ் வெங்கட்ராமன் குழந்தையை வரலட்சுமி சரத்குமாரிடமிருந்து பறிக்க முயற்சிக்கிறார். இருவருக்குள்ளும் மோதல் முற்றுகிறது. இதனிடையே, குழந்தை வரலட்சுமி சரத்குமாருக்கு பிறந்த குழந்தை அல்ல, எனத்தெரிய வருகிறது. ஒருபுறம், மைம் கோபி வரலட்சுமி சரத்குமாரை கொன்றுவிட்டு, குழந்தையை எடுத்துச்செல்ல வருகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே, சபரி.

முழுக்கதையும், வரலட்சுமி சரத்குமாரை சுற்றி வருகிறது. அவருக்கு மரியாதையான கதாபாத்திரம். சுயமரியாதை கொண்ட பெண்ணாக தனியே நின்று, நேர்மையாக வாழும் பெண்ணாக நடித்து, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். குழந்தையை மைம் கோபியிடமிருந்து காப்பாற்ற போரடும் போது அவர் படும் கஷ்டம், பெண்ரசிகைகளின் பரிதாபத்தினை அள்ளும்.

கணேஷ் வெங்கட்ராமனுக்கு பெரிதாக நடிக்க வாய்பில்லை. இருந்தாலும், கிடைத்த காட்சிகளில் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.

கலைந்த தலைமுடியுடன், தனது பெரிய கண்களை அகல உருட்டி, ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்துள்ளார்.

வரலட்சுமியின் தோழராக, வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஷசாங், வரலட்சுமியின் மகளாக நடித்திருக்கும் பேபி நிவேக்‌ஷா ஆகியோரின் நடிப்பில் குறைவில்லை!

ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் ஆகியோரின் ஒளிப்பதிவு, படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

கோபி சுந்தரின் இசை ஓகே.

இயக்குநர் அனில் கட்ஸ், திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வினை சரி செய்திருந்தால், சபரி நல்ல ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்திருக்கும்!