‘வல்லவன் வகுத்ததடா’ – விமர்சனம்!

‘கீதா உபதேசம்’ பொன்மொழிகளில் ஒன்றான, ‘சூழ்ச்சியின் நோக்கம் தர்மமானால், அந்த சூழ்ச்சியும் தர்மமாகும்.’ இதன், விரிவாக்கமாக உருவாகியிருப்பது தான், ‘வல்லவன் வகுத்ததடா’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்! விநாயகக் துரை எழுதி தயாரித்து இயக்கியுள்ளார்.

‘பகவத் கீதை’ சொல்லும் 18 வித குணங்களில், தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர், 6 குணங்களைக் கொண்டவர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில், ஒருவரைத் தவிர மற்றவர்கள், பணத்தினை எந்த வழியிலாவது சம்பாதித்து விடத் துடிப்பவர்கள்.

இந்த ஆறு பேரும், ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத நிலையில், பணம் தொடர்பான விஷயத்தில், தொடர்பு ஏற்படுகிறது. இப்படி, இவர்களது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள், ஒவ்வொருவரின் வாழ்க்கையினையும் புரட்டிப் போடுகிறது. அதை முடிந்தவரை, சுவாரசியமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார், இயக்குநர் விநாயக் துரை.

தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர், குறிப்பிடும்படி நடித்துள்ளனர். தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்துள்ளனர். இதில் நக்கல் சிரிப்புடன், போலீஸ் ஸ்டேஷனுக்குள் உண்டியல் வைத்து வசூல் வேட்டை நடத்தும், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன், சில போலீஸ் ஸ்டேஷனையும், இன்ஸ்பெக்டர்களையும் நினைவூட்டுகிறார். அதோடு ரசிகர்களிடம் தனி கவனம் பெறுகிறார்.

ஆறு கதாபாத்திரங்களைச் சுற்றி நிகழும் சம்பவங்களை இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்சிப் படுத்தியிருக்கலாம். பல குழப்பங்களுக்கு நடுவே, படம் இறுதி கட்டத்தை நெருங்கும் முன்னர் மட்டுமே கதையின் போக்கு புரிகிறது.

ஒளிப்பதிவாளர்,கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியரின் பின்னணி இசையும் ஓகே!

எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் விநாயக் துரை,  தெளிவான திரைக்கதையில், இன்னும் கூடுதல் சுவாரசியம் சேர்த்திருந்தால் ‘வல்லவன் வகுத்ததடா’ அனைவரின் வெற்றியைப் பெற்றிருக்கும்!

‘வல்லவன் வகுத்ததடா’ – எதிர் பார்ப்புகள் சில நேரங்களில் ஏமாற்றங்களையே தரும்.!