டக்கர் – விமர்சனம்!

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், உருவாகியுள்ள படம், டக்கர். கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்கியிருக்கிறார். சித்தார்த், திவ்யன்ஷா கௌஷிக் இணைந்து நடித்திருக்க, அவர்களுடன் யோகிபாபு, அபிமன்யு சிங், முனீஷ்காந்த், விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுறுசுறுப்பான கிராமத்து இளைஞன் குணா (சித்தார்த்). இவனது லட்சியம், ஆசை எல்லாமே எப்படியாவது பணக்காரன் ஆகிவிடவேண்டும் என்பது தான். இதற்காக சென்னைக்கு வருகிறான். கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறான். அப்போது சைனீஸ் கேங்ஸ்டர் ஒருவரிடம் ‘பென்ஸ்’ கார் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறான்.

குணாவிற்கு (சித்தார்த்) நேரெதிராக இருப்பவர், பிரபல கோடீஸ்வர தொழிலதிபரின் ஒரே மகள் லக்கி (திவ்யன்ஷா கௌஷிக்). இவரை கடத்தி பணம் பறிக்க  திட்டமிடுகிறார், வில்லன் ராஸ் (அபிமன்யு சிங்). இதற்கு இடையூறாக இருக்கும் சித்தார்த்திற்கும், அபிமன்யு சிங்கிற்கும் மோதல் உருவாகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், டக்கர் படத்தின் கதை.

முதலில் தெளிவாக நகரும் திரைக்கதை, அதன் பின்னர், இயக்குநர் கார்த்தி ஜி. கிரிஷின் கட்டுப்பாட்டினை மீறி எங்கெங்கோ செல்கிறது. இதனால் சுவாரசியம் மிஸ்ஸிங்! இடைவேளைக்கு பிறகே என்ன கதை, என்பதும் புரிகிறது. மேலும் இது ரொமான்டிக் படமா, காமெடி படமா, ஆக்‌ஷன் படமா? என குழப்பம் ஏற்படுகிறது. காட்சியமைப்புகள், மனதில் ஒட்டவில்லை.

அநேக படங்களில், சாக்லேட் பாயாக வலம் வந்த சித்தார்த், டக்கர் படத்தில், ‘ரக்கட்’ பாயாக வலம் வருகிறார். ஆரம்ப காட்சிகளில் தாடியும் முறுக்கு மீசையுமாக இருப்பவர் அதன் பிறகு ஆட்டுத்தாடியுடன் மீசை இல்லாமல் படம் முழுவதும் காட்சி தருகிறார். இது ரசிக்கும் படி இல்லை. முறுக்கு மீசையும் தாடியுமே நன்றாக இருக்கிறது. நடிப்பதற்கு வாய்ப்பில்லை. அடிதடியில் அசத்துகிறார்.

திவ்யன்ஷா கௌஷிக், படம் முழுக்க கவர்ச்சியை அள்ளி இரைத்திருக்கிறார். நடிப்பில் திறமை காட்டியதை விட, கவர்ச்சியில் அதிக திறமை காட்டியிருக்கிறார்.

காமெடி என்ற பெயரில், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், வழக்கம்போல் கடுப்பேற்றுகிறார்!

யோகிபாபு சில இடங்களில் சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறார்.

முனீஸ்காந்த் வரும் காட்சிகள், வெறுப்பேற்றுகின்றன.

கோமாளி வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அபிமன்யு சிங், வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவு பரவாயில்லை!

நிவாஸ் கே. பிரசன்னா இசையில், ‘நிரா நிரா’பாடல் ரசிக்கும்படி இருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ், திவ்யன்ஷா கௌஷிக்கின் கவர்ச்சியை நம்பி, என்னதான் ‘டக்கர்’ அடிச்சிருந்தாலும், ரசிகர்களை கவரமுடியாது!