‘தமிழ்  ராக்கர்ஸ்’ – விமர்சனம்!

அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் , தருண் குமார், அழகம் பெருமாள்,  வினோதினி, மாரிமுத்து, வினோத் சாகர், சரத் ரவி,  ஜானி, காக்கா முட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அஜித் ஜோஷி ஆகியோர் நடித்திருக்க, அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இணையத்தொடர் ‘தமிழ்  ராக்கர்ஸ்’. சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடரை, ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருணா குகன் மற்றும் அபர்ணா குகன் தயாரித்துள்ளனர்.

ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட்டு பலரது தூக்கத்தை கெடுத்து வருபவர்கள் தமிழ் ராக்கர்ஸ்! இவர்கள் யார்? எப்படி இயங்குகிறார்கள் என்பதை சில உண்மை சம்பவங்களுடன் கற்பனை கலந்து சொல்லி இருக்கிறார், இயக்குனர் அறிவழகன். எப்படி இருக்கிறது? பார்க்கலாம்!

சுமார் 300 கோடி ரூபாய் செலவில், தமிழ் சினிமாவின் உச்ச பட்ச (விஜய் சாயலில்) நடிகர் நடித்துள்ள படம், வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் அந்தப்படம் விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையத் தளத்தில் அப்படத்தின் சில காட்சிகள் வெளியிடப்பட்டு விரைவில் முழுப்படமும் வெளியிடப்படும். என அறிவிக்கப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் உட்பட படக்குழுவினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். வேறு வழியின்றி, படத்தின் தயாரிப்பாளர்  போலீஸ் உதவியை நாடுகிறார்.  அருண் விஜய் தலைமையிலான போலீஸ் குழு, தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடித்து, படம் வெளியிடுவதை தடுத்து நிறுத்தினார்களா? இல்லையா? என்பது தான் தமிழ் ராக்கர்ஸின் கதை.

போலீஸாக  நடித்திருக்கும் அருண் விஜய், கம்ப்பீரம். வழக்கம் போல் சிறப்பாக  நடித்து இருக்கிறார். சாதுர்யமாக தமிழ் ராக்கர்ஸ் டீமை நெருங்கும் காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்,  ‘சைபர்  க்ரைம்’ போலீஸ் துறையில் பணியாற்றும் வாணி போஜன் இருவரும்,  கொடுத்த வேலையை குறை  இல்லாமல் செய்து இருக்கிறார்கள்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் அழகம்பெருமாள், வெகு கச்சிதமாக அந்தக் கதாபாத்திரத்தில் பொருந்தி விடுகிறார்.

ஒரே காட்சியில் தயாரிப்பளாரக நடித்து இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு, பிரம்மாதம்! சினிமாவை நேசிக்கும் ஒரு தயாரிப்பாளரை கண்முன்னே கொண்டு வருகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் தருண் குமார் , வினோதினி, மாரிமுத்து, வினோத் சாகர், சரத் ரவி,  ஜானி, காக்கா முட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அஜித் ஜோஷி என அனைவரும் குறிப்பிடும்படி நடித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.ராஜசேகர்  ஒளிப்பதிவும், விகாஷின் பின்னணி இசையும் காட்சிகளை மேம்படுத்துகிறது.

தொய்வு இல்லாமல் காட்சிகளை அமைத்து கவனம் பெற்றாலும், க்ளைமாக்ஸில் நடக்கும் அமெச்சூர் தனமான துப்பாக்கி சண்டைக் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அருண் விஜய் படம் நெடுக சிகரெட் பிடிக்கும் காட்சிகள், ரசிக்கும் படி இல்லை!

‘தமிழ் ராக்கர்ஸ்’ சை ஒருமுறை பார்க்கலாம்!