ரங்கா, ரியா, நிதின் மேத்தா, இளங்கோ குமணன், வத்ஸன் நடராஜன், ராம், விஷால் சுமா, ஆறு பாலா, திலீபன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள படம், தென் சென்னை. நாயகனாக நடித்திருக்கும் ரங்காவே கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். எப்படி இருக்கிறது? தென் சென்னை.
கடன் வாங்கி ஹோட்டல் – பார் நடத்தி வருகிறார், நாயகனின் மாமா டோனி (இளங்கோ குமணன் ). நாயகன் ஜெய்சன் (ரங்கா) அவருக்கு உதவியாக இருந்து வருகிறார். கடனை உரிய நேரத்தில் கட்டமுடியாமல் போவதால், ருத்ரன் (நிதின் மேத்தா) அந்த ஹோட்டல் – பாரை லீஸூக்கு எடுத்துக்கொள்கிறார். உலக கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் சமயத்தில், அந்த பாரில் பல வழிகளில் பணம் கொட்டுகிறது. இதனால், (இளங்கோ குமணன் ) டோனிக்கு தன்னுடைய இடத்திலிருந்து இன்னொருவர் சம்பாதிப்பது பிடிக்கவில்லை! மேலும் குடும்பத்திற்கும் எதுவும் செய்ய முடியாத கவலையும் ஆத்திரமும் ஏற்படுகிறது. அதோடு (ரங்கா) ஜெய்சனின் அப்பா சாவிற்கும் தான் காரணமாகி விட்டதாக குற்றயுணர்ச்சி கொள்கிறார். இதன் காரணமாக அவர் ஒரு முடிவெடுக்கிறார். அந்த முடிவு பலரையும் காவு வாங்குவதோடு, டோனி ஜெய்சன் இருவரின் உயிருக்குமே பிரச்சனை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து தப்பித்தார்களா, ஹோட்டலை மீட்டார்களா? என்பது தான் தென் சென்னை படத்தின் கதை.
தேவராஜ் அவர்களது பூர்வீகம், வாரிசுகள் என, படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் அனிமேஷன் காட்சிகள் இண்ட்ரஸ்டிங்காக இருக்கிறது.
உலக பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக சீர்குழைத்த கொரோனா சமயத்தில் கதை நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிர் பலி, பொருளாதார இழப்பு, மனித நேயம் இவைகளை ஒருங்கிணத்து சிறப்பான திரைக்கதையாக தொகுத்துள்ளனர். ஆனால், காட்சிப்படுத்துதலில் கோட்டை விட்டுள்ளனர். இது சரியாக இருந்திருந்தால், ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் படமாக தென் சென்னை இருந்திருக்கும்.
செந்தில் மோகனின் ஒளிப்பதிவும், ஜென் மார்ட்டினின் இசையும் ஓகே!
படத்தில் நடித்த நடிகர்களில் தனித்து கம்பீரமாக நிற்கிறார், நிதின் மேத்தா. அவரது கதாபாத்திரமும், அதற்கான நடிப்பும் தரமாக இருக்கிறது.
அடுத்ததாக, இளங்கோ குமணன் ‘டோனி’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். குடும்பத்திற்கு எதுவும் செய்யமுடியாமல் போவதை எண்ணி வருந்தும் காட்சியிலும், ரங்காவை காப்பாற்ற போராடும் காட்சியிலும் நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருக்கிறார்.
படத்தின் நாயகி ரேகா, வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரணி என அனைவரும் தங்களது பங்கிற்கு நடித்துள்ளனர்.
கதை எழுதி, இயக்கி நடித்திருக்கும் ரங்காவின் நடிப்பில் குறைவில்லை, என்ற போதிலும் இயக்கத்தில் கூடுதல் கவனம் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.