தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது உள்ளது. இதையே மாதம் தோறும் கணக்கிட வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும் தாமதமான கணக்கீட்டினால் மின்கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம் ஏற்பட்டு மக்கள் பலமடங்கு உயர்வாக மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.
இது குறித்து ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசுக்கு கேள்வி விடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு…
‘அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
பயன்பாட்டு அளவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட மூன்று மடங்கு வரை அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல.
கொரோனா பேரிடரால் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வரும் மக்களுக்கு அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு, கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.
வெளிப்படையான நிர்வாகம் பற்றி நிறைய பேசும் தி.மு.க அரசு மின் கட்டண விவகாரத்தில் மக்களிடம் இப்படி மறைமுகமான கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுவது ஏன்?’ என அவர் கேள்வி விடுத்துள்ளார்.