வாய்தா – விமர்சனம்!

தமிழ்நாட்டில் உள்ள 445 கிராமங்களில் தீண்டாமை வன்கொடுமைகள் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் 10 நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்துள்ளது, என்கிறது ஒரு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள தகவல். இந்த மாதிரியான ஒரு கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தினை கொண்டே ‘வாய்தா’ படம் உருவாகியிருக்கிறது.

சாதிய பாகுபாட்டின் கோரப்பற்களில் சிக்கிக் கிடக்கும் கிராமத்தின் சலவைத்தொழிலாளி, மு.ராமசாமி.  அவர் ஒரு சாலை விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்தை ஏற்படுத்தியவர் மீது போலீஸில் புகார் கொடுக்க  அவரது குடும்பத்தினர் முன் வருகின்றனர். இதை அறியும் ஊரின் பெரிய மனிதர்கள் அதை தடுத்து சமரசம் செய்கின்றனர்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியவர் மு.ராமசாமி தன்னுடைய வண்டியை திருடி விட்டதாக போலீஸில் புகார் கொடுக்கிறார். இரு தரப்பிலும் பிரச்சனை பெரிதாக உருவெடுக்கிறது. அதனால் நீதிமன்றமும் செல்கிறது. அங்கே நீதி யாருடைய பக்கம் நின்றது என்பதுதான் வாய்தா படத்தின் மீதிக்கதை.

ஆதிக்க சாதியினரின் அக்கிரமத்தால் அடங்கி, ஒடுங்கி நடித்திருக்கும் மு.ராமசாமியின் நடிப்பு அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் மீதான பரிதாபத்தை வரவழைக்கிறது. பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரது மகனாக நடித்திருக்கும் புகழும் இயல்பாக நடித்திருக்கிறார். இவர்களைப் போலவே கதாநாயகியாக நடித்திருக்கும் ஜெசிகா பவுலின் நடிப்பிலும் குறைவில்லை. காதல் காட்சிகளில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கிறார்.

படத்தின் நடித்த நாசர், ‘நக்கலைட்ஸ்’ பிரசன்னா, மு.ராமசாமியின் மனைவியாக நடித்திருப்பவர் என படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரங்களுக்கேற்ற சரியான தேர்வு.

சாதி, என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கிறது. அது நீதிமன்றத்தில் எப்படி இருக்கிறது. என்பதை படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது.